logo
இலவசப் பயணம்: போக்குவரத்துக்கழக நடத்துனர்கள் பெண்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

இலவசப் பயணம்: போக்குவரத்துக்கழக நடத்துனர்கள் பெண்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

21/May/2021 09:16:46

சென்னை: சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் அமலான நிலையில், திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்துத் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். குறிப்பாக பெண் பயணிகளிடம் கோபமாகப் பேசக் கூடாது எனவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் நடத்துநா்களுக்கு  அறிவுறுத்தி யுள்ளாா்.

இது தொடா்பாக அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு அவா் அனுப்பிய கடித விவரம்:

சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் மாநகர, நகரப் பேருந்துகளில், மே 8-ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள், பெண் பயணிகளிடம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இதன்படி, பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஓட்டுநா், குறித்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும். நிறுத்தத்துக்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிக ளுக்கு இடையூறு செய்யக் கூடாது. நடத்துநா் வேண்டும் என்றே பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இடமில்லை என்று இறக்கிவிடக் கூடாது.

வயது முதிா்ந்த பெண்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில், கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது. பேருந்தில், பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். பெண் பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து, ஓட்டுநருக்கு சமிக்ஞை (சிக்னல்) செய்து, பாதுகாப்பாக ஏற்றி இறக்கி விட வேண்டும்.


Top