logo
முழு ஊரடங்கு: ஈரோட்டில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது-உணவகங்கள் செயல்பட்டன

முழு ஊரடங்கு: ஈரோட்டில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது-உணவகங்கள் செயல்பட்டன

16/May/2021 11:58:32

ஈரோடு, மே:முழு ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்காணப்பட்டது. உணவகங்களில்  பார்சல்  மட்டும்  விநியோகம் செய்யப்பட்டது.

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தமிழகத்தையும் புரட்டிபோட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அரசு அறிவித்தது. காய்கறி மளிகை கடைகள் இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.மற்ற வகையான அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் முழு ஊரடங்கின் போது மக்கள் தேவையில்லாமல் அதிக அளவு வெளியே சுற்றி வந்தனர்.

 

இதைத் தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி முதலமைச்சர் மு. .ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இதையடுத்து  காய்கறி மளிகை இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை எவ்விதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி  ஈரோட்டில்  ஈரோட்டில் ..சி பூங்காவில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் இன்று செயல்படவில்லை. உழவர் சந்தையும் செயல்படவில்லை. மளிகை, பலசரக்கு கடையும் மூடப்பட்டிருந்தது. ஆனால் அதேநேரம் வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்பட்டன.

இதேபோல் வழக்கமான உணவகங்களும் செயல்பட்டன. உணவங்களில் பார்சலில் மட்டும் உணவு வினியோகம் செய்யப்பட்டது.அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அதைப்போல்  மருத்துவம னைகள், மருந்தகங்கள் செய்யப்பட்டன. பெட்ரோல் பங்குகளும் வழக்கம் போல் இயங்கின. இதேபோல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலையில் வழக்கம் போல் இருசக்கர வாகனங்களில் ஏராளமானவர்கள் அங்கும் இங்கும் சென்ற வண்ணம் இருந்தனர். பெண்களும் அதிக அளவில் வெளியே சுற்றித் திரிந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றும் வாலிபர்களை மடக்கிப் பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம் பகுதியில், மேட்டூர் ரோடு பெருந்துறை ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா போன்ற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, கோபி உள்பட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.முக்கியச் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன

Top