logo

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தனிமை காலம் முடிந்ததும் நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் பெறலாம்: அதிகாரிகள் தகவல்

13/May/2021 05:37:42

ஈரோடு, மே:  ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தனிமை காலம் முடிந்ததும்  ரேஷன் கடைகளுக்குச்சென்று நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் பெறலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா  நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.  அதில், முதல்கட்டமாக இந்த மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதற்கான டோக்கன் கடந்த 10-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதைத் தடுக்கும் வகையில் கொரோனா நிவாரண தொகை க்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின் றனர். ஆனால் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வீடுகளில் எப்படி டோக்கன் வழங்குவது என்ற பிரச்னை  எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர் கள் அச்சத்தில் அந்த வீடுகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.


ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 1152 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 910 அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். கடந்த 10-ஆம் தேதி முதல் ஒரு கடைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.  இந்நிலையில் தற்போது ஈரோடு மாநகர் பகுதியில் கொரோ னா வேகமாக பரவி வருகிறது.குடும்பம் குடும்பமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

 இதனால் மாநகர் பகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.   இப்படி தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு ரேஷன் கடை டோக்கன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதியும் இல்லை. இதனால் டோக்கன் வழங்கும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:  ஈரோடு மாவட்டத்தில் 1152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 13 ஆயிரத்து 910  அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த 10ஆம் தேதி முதல் வீடுகளுக்குச் சென்று டோக்கன்கள் விநியோகித்து வருகிறோம். இந்த பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 இந்நிலையில் மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் நிலவரப்படி 2,117 வீடுகள் கொரோனா தொற்று பரவல்  காரணமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. இந்த வீடுகளில் உள்ளவர்கள் வெளியில் வரக்கூடாது. ரேஷன் கடை ஊழியர்களும் அங்கு செல்லமுடியாது. எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வீடுகளில் உள்ள பயனாளிகள் தனிமை காலம் முடிந்தபின் ரேஷன் கடைக்கு வந்து பணத்தை பெற்று கொள்ளலாம் என்றார் அவர். 


                                                   


Top