logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

30/Mar/2021 09:59:23

புதுக்கோட்டை, மார்ச்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 


தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தலில் ஓட்டு சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 


இதையடுத்து  புதுக்கோட்டை மாவட்டத்திலும்  இதற்கான  பணிகள்  நடந்து வந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை(தனி)  ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 25,593  பேரும், மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரத்து 600 பேரும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள்   தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏதுவாக 12 -டி படிவம்  வழங்கப்பட்டது.


 இதில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 80 வயதுக்கு மேற்பட்ட 2,748 வாக்காளர்களிடம் இருந்தும், 533 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களிடம் இருந்து என  மொத்தம் 3,301 பேர் தபால் மூலம் ஓட்டு போட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இதில் கந்தர்வகோட்டை தொகுதியில் 555 பேரும், விராலிமலை தொகுதியில் 1473 பேரும், புதுக்கோட்ைட தொகுதியில் 426 பேரும், திருமயம் தொகுதியில் 396 பேரும், அறந்தாங்கி தொகுதியில் 333 பேரும்  ஆலங்குடி தொகுதியில் குறைந்தபட்சமாக  118 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு  வாக்கு சீட்டு படிவத்துடன் உரிய கவர்களை வைத்து அவர்களது முகவரி  ஒட்டி தயார் செய்யப்பட்டது.


 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியிலும் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் குழுவினர் நேரடியாக வாக்காளர்கள் வீட்டுக்குச் சென்றனர். இந்த வாக்கு சேகரிக்கும் குழுவில் மண்டல அலுவலர் கண்காணிப்பாளராகவும், இரண்டு வாக்கு சேகரிக்கும் அலுவலர்கள், நுண் கண்காணிப்பு அலுவலர், வீடியோ கிராபர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்குசாவடி  முகவர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் உடன் சென்றனர். இதில் விடுபட்டவர்களுக்கு அடுத்த ஓரிரு நாளில்  வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Top