logo
நீர் நிலை பகுதியினருக்கு வீடு கிடைக்க முயற்சி ஈரோடு காங்., வேட்பாளர் திருமகன் உறுதி

நீர் நிலை பகுதியினருக்கு வீடு கிடைக்க முயற்சி ஈரோடு காங்., வேட்பாளர் திருமகன் உறுதி

27/Mar/2021 08:06:43

ஈரோடு, மார்ச்: ஈரோடு கிழக்கு தொகுதியில் நீர் நிலை பகுதியினருக்கு வீடு கிடைக்க முயற்சி செய்வேன்  என்று ஈரோடு காங்கிரஸ்  வேட்பாளர் திருமகன்ஈவெரா  உறுதியளித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா, கூட்டணி கட்சியினருடன் இணைந்து, மாணிக்கம் திரையரங்கம் காளியம்மன் கோவில் பகுதி, மீனவர் வீதி பகுதி, பெரும்பாளையம் ஓடை, பழைய பூந்துறை சாலை, போலீஸ் குடியிருப்பு, நேதாஜி சாலை ஆகிய பகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு  சேகரித்தார்.

அப்பகுதி வாக்காளர்களிடம், வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

மாநகராட்சியின், 44, 45, 51-ஆவது வார்டு பகுதி ஓடை பகுதியாகவும், நீர் நிலையின் ஆபத்துடன் கூடியதாகும். இப்பகுதியினர் கூலி வேலை செய்து, சிறிய அளவில் சுய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் அல்லது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வேன். அவர்களது வாழ்வாதாரம், வேலை பாதிக்காத வகையில், குடியிருப்புகள் கிடைக்க  முயற்சி செய்வேன்.

இப்பகுதி சாய, சலவை, தோல் ஆலை கழிவு வெளியேற்ற பிரச்னைக்கு கடந்த, பத்தாண் டுகளில் மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இத்தொழில் முடங்கியும், அழிந்தும், பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதை சீரமைக்கும் வகையில், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அப்பிரச் னைக்கு தீர்வு கண்டு, வாழ்வாதாரம் காக்கப்படும்.

இப்பகுதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. பொது குடிநீர் குழாய் இல்லாததால், மக்கள் குடிநீர் பெற சிரமப்படுகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், பொது கழிப்பறை அமைத்து, அதனை மாநகராட்சி மூலம் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

இங்குள்ள மீனவர்கள் பாதுகாப்புடன் காவிரி மற்றும் வாய்க்காலில் மீன் பிடித்து, அதனை விபற்னை செய்ய தேவையான உபகரணங்கள் வாங்கி தந்து, மீன் விற்பனைக்கான அங்காடிகள் ஏற்படுத்தி தரப்படும். இப்பணியை, எனது தொகுதி நிதி அல்லது, அரசின் சிறப்பு திட்டம் மூலம் நிறைவு செய்வேன். இவற்றை செயல்படுத்த எனக்கு வாக்களித்து  வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

பின், பெரியார் நகர் பகுதி, சிதம்பரம் காலனி, கோவிந்தராஜர் வீதி, கருப்பண்ணா வீதி, ராஜா காடு, 80 அடி சாலை, உழவர் சந்தை பகுதி, ரயில்வே காலனி, மணல்மேடு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

Top