logo
சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் நலச் சங்கம் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: கோவில் பூசாரிகள் நலச் சங்கம் அறிவிப்பு

18/Mar/2021 09:32:45

சேலம், மார்ச்: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக  கோவில் பூசாரிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து  கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் பி. வாசு வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,000 -த்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். கோயில் பூசாரிகள் மாத ஊதியம் ரூ. 2,000 வழங்கப்படும் ,அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பயிற்சி பெற்ற 225 மாணவர்களும் பணி நியமனம்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துகளையும் கண்காணித்து பாதுகாக்க 25 ஆயிரம் இளைஞர்கள் பணி நியமனம். பத்ரிநாத், கேதார்நாத், ரிஷிகேஷ் போன்ற வடநாட்டு திருத்தலங்களுக்கு சென்றுவரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை 1  லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளை  கோவில் பூசாரிகள் நலச்சங்கம் முழு மனதுடன் வரவேற்கிறது.

 தமிழக சட்டப் பேரவைக்கு இதுவரை 15 முறை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. பல்வேறு கட்சிகளும் அவ்வப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் பூசாரிகளுக்கு பெயரளவில்தான் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை ஆட்சிப் பொறுப்பேற்றதும் அமல்படுத்துவோம் என்று திமுக தலைவர் அறிவித்திருப்பது   பூசாரிகளின் வாழ்வில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவளித்து வெற்றி பெறச்செய்வதென ஒரு மனதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது.  

 திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினை கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத்  தலைவர் பி.வாசு பூசாரி  தலைமையில் சங்கத்தின் பொருளாளர் கே. சுந்தரம் ,செயலாளர் எஸ். சங்கர், பூசாரியின் குரல் ஆசிரியர் த.புருஷோத்தமன் உள்ளிட்டோர் சென்ற ஞாயிற்றுக்கிழமை

(14-3-2021) சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில்   திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து ஆதரவு கடிதமும் அளிக்கப்பட்டது என பி. வாசு பூசாரி தெரிவித்துள்ளார்.

Top