logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அஇஅதிமுக - திமுக நேரடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அஇஅதிமுக - திமுக நேரடி போட்டி

13/Mar/2021 07:53:43

புதுக்கோட்டை, மார்ச்: தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதில்,  அதிமுகவுக்கும் திமுகவுக்கும் விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம்  4  தொகுதிகளில் அதிமுகவும் திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அஇஅதிமுக - திமுக

விராலிமலை தொகுதி - சி.விஜயபாஸ்கர் (அஇஅதிமுக) - தென்னலூர் பழனியப்பன் (திமுக). புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 5 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பின் போது, குளத்தூர் (தனி) தொகுதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கந்தர்வகோட்டை (தனி) மற்றும் விராலிமலை  ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டன. 

மூன்றாவது  முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விராலிமலை தொகுதியில் கடந்த 2 தேர்தல்களில்  அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று சுகாதாரத்துறை அமைச்சரான சி. விஜயபாஸ்கருக்கு இத்தேர்தலில் மீண்டும் போட்டியிட அக்கட்சித்தலைமை வாய்ப்பளித்துள்ளதால் அக்கட்சித்தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

 புதுக்கோட்டை தொகுதி - வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (அஇஅதிமுக) - டாக்டர் வை.முத்துராஜா (திமுக), 

இந்த தொகுதியில் 1962 -ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு இடைத்தேர்தல் உள்பட 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், அதிமுக சார்பில் 2016 தேர்தலில் போட்டியிட்ட வி.ஆர். கார்த்திக்தொண்டைமானுக்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பின்படியே கட்சித்தலைமை இந்தத்தேர்தலிலும் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 

திருமயம் தொகுதி - பி.கே.வைரமுத்து (அஇஅதிமுக) - எஸ்.ரகுபதி (திமுக). இந்த தொகுதியில் 1957 -ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், த.மா.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில்  போட்டியிட்டு வென்ற  எஸ். ரகுபதியும், அதிமுக சார்பில்  வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்துவும் தற்போது மீண்டும் போட்டியிடுகின்றனர்.

ஆலங்குடி தொகுதி - தர்ம.தங்கவேல் (அஇஅதிமுக) - சிவ.வீ.மெய்யநாதன் (திமுக)ஆலங்குடி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் சிவ.வீ. மெய்யநாதனும், அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளர் தர்ம தங்கவேலும்  இந்தத் தேர்தலில் களம் காண்கின்றனர்  கந்தர்கோட்டை தனி தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அறந்தாங்கியில் காங்கிரஸ் கட்சியும் களம் காண்கின்றனர். 

தமிழகம் முழுவதும்  129 தொகுதிகளில் அதிமுக, திமுக  இடையே  நேரடிப் போட்டியும், 18 தொகுதிகளில் திமுகவும், பாமகவும் ,14 தொகுதிகளில் திமுகவும், பாஜகவும் நேரடியாக மோதுகின்றன..                                                   

        


Top