logo
ஈரோடு சுற்றுவட்டச்சாலை விரைவில் திறக்கப்படும்:  நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் தகவல்

ஈரோடு சுற்றுவட்டச்சாலை விரைவில் திறக்கப்படும்: நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் தகவல்

14/Feb/2021 04:55:26

ஈரோடு, பிப்: ஈரோடு சுற்றுவட்டச்சாலை விரைவில் திறக்கப்படும் என்றார் நெடுஞ்சாலை தலைமை பொறியாளர்  எம், முருகேசன்.

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சுற்று வட்டச்சாலை அமைக்க கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக கொக்கராயன்பேட்டையில் இருந்து லக்காபுரம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கும், கொக்கராயன்பேட்டையில் இருந்து கரூர்ரோடு வரை சாலையும் அமைக்கப்பட்டது. 2-ஆவது கட்டமாக பரிசல்துறையில் இருந்து ஆனைக்கல்பாளையம் வரை சாலைகள் அமைக்கப்பட்டன.

3-ஆவது கட்டமாக ஆனைக்கல்பாளையத்தில் இருந்து திண்டல் வரை சாலை அமைக்கவும், ஜீவா நகரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் ரூ.69 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வந்தது. இதில் 6.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு  பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. நீதிமன்றத்தில்  வழக்குகள் நிலுவையில் இருந்ததால், 815 மீட்டர் தொலைவுக்கு  சாலை பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது. இதனால் பணிகள் முழுமை பெறாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள வழக்குகள் முடித்து வைக்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 815 மீட்டர் நீளத்துக்கான பணிகளை முடிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.4 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (திட்டங்கள்) எம்.முருகேசன்  ஆய்வு செய்தார். அப்போது சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், குடிநீர் குழாய்களை மாற்ற சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து தலைமை பொறியாளர் எம்.முருகேசன் கூறியதாவது: ஈரோடு சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கான இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழக முதல்-அமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இந்த சாலையால் ஈரோடு மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், பயண நேரமும் குறைகிறது.

இதேபோல் ஈரோடு பெருந்துறைரோட்டில் திண்டல் சந்திப்பில் இருந்து வில்லரசம்பட்டி வழியாக கனிராவுத்தர்குளம் வரை 8.4 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலையை ரூ.20 கோடியே 85 லட்சம் செலவில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது என்றார் அவர். 


Top