logo
பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில்  ஊரக திறனாய்வு தேர்வு

பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு

26/Jan/2021 08:26:34

ஈரோடு, ஜன:தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் கிராமப்புறத்தில் படிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஊரக திறனாய்வு தேர்வினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

 இத்தேர்வில்  தகுதி பெறும், மாணவ-மாணவிகள் பிளஸ்- 2 முடிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் 13 மையங்களில் 1,338 மாணவ-மாணவிகள் தேர்வினை எழுதினர். கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்வுகள் தொடங்கியது. 

தேர்வு மையங்களுக்கு மாணவ மாணவிகள் காலை 8 மணி முதலே வரத் தொடங்கினர். அனைத்து மாணவ மாணவிகளும் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டிருந்தது. நுழைவாயில் அவர்களது கையில் கிருமிநாசினி கொடுத்து சுத்த படுத்தப்பட்டது. அவர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.  

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதாவது ஒரு மையத்தில் 130 மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு தேர்வறையில் 10-க்கு உட்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத அனுமதித்தனர்.

  தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 12.30  மணிக்கு நிறைவடைந்தது.  முன்னதாக தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்க ளுக்கு கொண்டு வரப்பட்டது.. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வி துறையினர் செய்திருந்தனர். இந்தத் தேர்வில் 124 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. 

                                                   


Top