logo
தமிழகம் முழுவதும் 1.24 கோடி பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.19 லட்சம் பேரும்  எழுதப்படிக்கத்  தெரியாதவர்கள்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

தமிழகம் முழுவதும் 1.24 கோடி பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.19 லட்சம் பேரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

02/Dec/2020 09:06:08

புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயதுவந்தோர் கல்வித் திட்டம் 2020-21 தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கற்போருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி  மாவட்ட ஆட்சியர்  பேசியதாவது: தமிழகத்தில் 2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத் தின் கீழ், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் இயக்கத்தின் மூலம்  கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலரால் செயல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில்  2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் 15 வயதுக்கும் மேற்பட்ட 1.24 கோடி பேர் முற்றிலும்  எழுதப்படிக்கத்  தெரியாதவர்களாக  இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்த வரையில் 3.19 இலட்சம் பேர் எழுதப் படிக்கத்  தெரியாதவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற  இலக்கை அடையமுடியும்.  

இதனைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்காக ஒவ்வொரு கிராமங்கள், வார்டுகள்  அளவில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில், அங்கன்வாடி மைங்களில் ஏற்கனவே பராமரிக்கப்படும் குடும்ப விவரம், சர்வே பதிவேட்டில் ‘கல்விநிலை” என்கிற பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோரின் விவரங்களை அருகே உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் 1,987 ஆண்கள், 5,962 பெண்கள் என மொத்தம் 7,949 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 

இவர்களை ஒரு மையத்திற்கு 20 பேர் வீதம் 398 கற்றல் மையங்கள் 13 ஒன்றியங்களிலும் ஏற்படுத்தப்பட்டு தன்னார்வல ஆசிரியர்கள் மூலம் ஒருநாளைக்கு 2 மணிநேரம் என கணக்கீட்டு மாதம் ஒன்றிற்கு 40 மணிநேரம் கற்றல் கற்பித்தல் நடைபெறும்.

இப்பயிற்சியில் அடிப்படை தமிழ், அடிப்படை கணக்கு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை  3 மாதங்கள் கற்றுத்தரப்படும். 3 -ஆம் மாத முடிவில் சிறுதேர்வு நடத்தப்பட்டு அவர்களின் கற்றல் நிலை சோதிக்கப்படும். இதைப்போல் 3 கட்டங்கள் நடத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி.

இதில்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், சண்முகநாதன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top