logo
நிவர் புயல் காரணமாக 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது

நிவர் புயல் காரணமாக 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

25/Nov/2020 09:00:56

சென்னை:  நிவர் புயல் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர்

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களுக்கு  நாளை(நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் மூடப்படுகிறது.  புயல் கரையைக் கடந்தாலும் அடுத்த 6 மணி நேரத்துக்கு சென்னையில் மக்கள் வெளியே வரவேண்டாம்.நிவர் தீவிர புயலால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கடலோரக் காவல்படை மற்றும் முப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். கடலோர காவல் படையின் 100 வீரர்கள் அடங்கிய 5 பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரு குழுக்கள் மண்டபம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் 80 வீரர்கள் அடங்கிய 8 குழுக்கள் 2 படகுகளுடன் சென்னைக்கும், 6 பேரிடர் மீட்பு குழுக்கள் திருச்சிக்கும் சென்றுள்ளன.புயல் கரையைக் கடந்த பின் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விமானப்படையின் 8 ஹெலிகாப்டர்கள் பெங்களூரு, சூலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் வெள்ள மீட்புக் குழுக்கள் சென்னை, நாகப்பட்டினம் ராமேஸ்வரம் மற்றும் கடற்படை தளம், விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஐஎன்எஸ் ஜோதி என்ற கப்பல் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் மீட்புக்குழுக்களுடன் தேவைப்படும் இடத்திற்கு செல்ல தயாராக இருக்கிறது.

இரவு 7 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூழலைப் பொறுத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நிவர் புயல் நள்ளிரவு 2 மணியளவில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Top