logo
100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

29/Oct/2020 09:04:31

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 40 ஆண்டு காலமாக கிராமப்புற மக்களின் நலன் கருதி இடதுசாரி கட்சிகளால் போராடி பெற்றது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் கடந்த 2006 -ஆம் ஆண்டு முதல் அமல்படுத்திவருகிறது.

இத்திட்டம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டுமென விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் போராடி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பேரூராட்சி மற்றும் நகரங்களில் நகர்ப்புற வேலைத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 526 பேரூராட்சிகளில் சுமார் 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

 மத்திய மாநில அரசுகள் வறுமையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வேலை வழங்க கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகங்களில் மனு கொடுக்கும் இயக்கம் தொடர்ச்சியாக நடத்துவது என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் நூறு நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மகேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விவேகானந்தன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வி.ஆர் மாணிக்கம் விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வெங்கிடுசாமி சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேரூராட்சி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும் பொருட்டு நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தை பேரூராட்சிகளில் வழங்கவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். 


Top