logo
 யுவராஜுக்கு ஜாமீன் அளிக்கும் விவகாரம்: எதிர்ப்பு நிலையை தமிழகஅரசு கைவிட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தல்

யுவராஜுக்கு ஜாமீன் அளிக்கும் விவகாரம்: எதிர்ப்பு நிலையை தமிழகஅரசு கைவிட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தல்

12/Oct/2020 01:57:36

சென்னை:  யுவராஜுக்கு ஜாமீன் அளிக்கும் விவகாரத்தில் தனது எதிர்ப்பு நிலையை தமிழகஅரசு கைவிட வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

 இது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலர் .ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

 2015–ஆம் ஆண்டிலிருந்து ஜாமீனில் வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் மற்றும் 13 பேர் ஜாமீனுக்கு காட்டும் எதிர்ப்பை தமிழக அரசு தவிர்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக யுவராஜ் மற்றும் 13 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தவறு செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கப் போகிறது. ஆனால், தனிமனித உரிமையான ஜாமீன் வழங்கப்படுவதைக் கூட ஒவ்வொருமுறையும் தமிழக அரசு எதிர்ப்பு காட்டி தடுத்து வருவது வேதனையளிக்கிறது.

5 ஆண்டுகள் கழிந்தும் கூட ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சியங்களை அழித்துவிடுவார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை கூட தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்று வாதாடி ரத்து செய்தது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தப்பிவிடக்கூடாது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

நீதி நிலை நாட்டப்படும் போது தண்டனை கொடுக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஆனால், தமிழக அரசு உள்நோக்கத்தோடு ஜாமீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் கழித்து கூட வாதாடுவது ஏற்புடையதல்ல. இப்போதைய தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கின்ற எல்.முருகன்அவர் தில்லியில் இருந்த போது அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார் என்ற செய்திகளை கூட அந்த காலக்கட்டத்தில் கேள்விப்பட்டோம். தமிழகத்தின் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின் இந்த விஷயத்தில் எல்.முருகன், தமிழக முதல்வருடன் சேர்ந்து  செயல்படுகிறாரா என்ற சந்தேகமும் வராமல் இல்லை.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் மென்மையை கடைப்பிடிக்கின்ற தமிழக அரசு, நாகர்கோவில் பாலியல் வழக்கில் கைதான காசி மீதும் மென்மையைக் கடைபிடிக்கின்ற தமிழக அரசு, சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் தவிர்த்து நீதிமன்ற ஆணைக்கு பின் அதை நிறைவேற்றிய தமிழக அரசு.

தூத்துக்குடியில் மக்களுக்காக போராடிய 13 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு கொன்றவர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற தமிழக அரசு, கோவை வேளாண் கல்லூரி பெண்களை உயிரோடு பேருந்தில் வைத்து எரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை காரணம் காட்டி விடுதலை செய்த தமிழக அரசு, 5 ஆண்டுகள் கழித்தும் கூட யுவராஜ் உட்பட 14 பேருக்கு ஜாமீன் வழங்குவதை  வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பது ஏன்?. 

தமிழக அரசு சட்டத்தை மட்டுமல்லாமல் நீதியையும் கையில் எடுத்துக்கொண்டு உள்நோக்கத்தோடு செயல்படுவது போல தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தமிழக காவல்துறைக்கு சரியான வழிகாட்டுதலை கூற வேண்டும். விசாரணை கைதிகளாக 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்துக்கொண்டு சாட்சிகளை கலைப்பார்கள் என்ற காரணத்தை நீதிமன்றத்தில் சொல்லி இன்னும் ஜாமீனை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.                                                                               

        

Top