logo
மருத்துவப் பல்கலை.யில்  முதுநிலை, முனைவர் படிப்பில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

மருத்துவப் பல்கலை.யில் முதுநிலை, முனைவர் படிப்பில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

08/Oct/2020 11:56:57

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் பிஹெச்டி, எம்எஸ்டி மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான  அறிவிக்கையை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்தப்படிப்புகளில் சேர வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: நோய்ப் பரவியல்/தொற்று நோயியல்/பொது சுகாதாரம்/உயிரி தரவியல் ஆகிய பிரிவுகளில் பகுதி நேர மற்றும் முழு நேர முனைவர் (பிஹெச்டி) படிப்புகள் பல்கலைக்கழகத்தில் உள்ளன. மொத்தம் 6 இடங்கள் உள்ள அப்படிப்புகளில் சேர சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம். முழு நேர முனைவர் படிப்பு 3 ஆண்டுகளாகவும், பகுதி நேரப் படிப்பு 4 ஆண்டுகளாகவும் பயிற்றுவிக்கப்படும்.

அதேபோல், முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி) பொது சுகாதாரப் படிப்புக்கு 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன. எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/பிஎஸ்சி நர்சிங்/பிபிடி/பிஓடி/பி.பார்ம் /பிஇ (சிவில்)/எம்எஸ்சி (லை‘ஃ‘ப் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்தவர்கள்  எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/எம்பிடி/எம்ஓடி/பி.பார்ம்/எம்எஸ்சி (லை‘ஃ‘ப் சயின்ஸ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதைத் தவிர, முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடர்பான ஓராண்டு படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓர் இளநிலை பட்டப் படிப்புடன் இதழியல் துறையில் 6 மாத கால பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும்  http://www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது 044-2220 0713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.. 


Top