logo
ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு:844 காளைகள் பங்கேற்பு, 48 பேர் காயம்

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு:844 காளைகள் பங்கேற்பு, 48 பேர் காயம்

13/May/2022 08:33:52

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 48 பேர் காயமடைந்தனர்.

 ஆலங்குடி அருகேயுள்ள  பாப்பான்விடுதி முத்துமுனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில்  நடைபெற்ற ஜல்லிக்கட்டை சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 844 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 250 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில், 48 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.அதில்,பலத்த காயமடைந்த 7 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் , பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.

போட்டியை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் செந்தில்நாயகி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸார் மேற்கொண்டனர்.

 

Top