logo
கோபி அருகே உள்ள சாணார்பதியில் மயானத்திற்கு செல்லும் வழியில் கீரிப்பள்ளம் ஓடையில் நிரந்தரப்பாலம்  அமைக்க கோரிக்கை

கோபி அருகே உள்ள சாணார்பதியில் மயானத்திற்கு செல்லும் வழியில் கீரிப்பள்ளம் ஓடையில் நிரந்தரப்பாலம் அமைக்க கோரிக்கை

17/Aug/2021 06:19:54



ஈரோடு, ஆக: ஈரோடு  மாவட்டம், கோபி அருகே உள்ள சாணார்பதியில் மயானத்திற்கு செல்லும் வழியில் கீரிப்பள்ளம் ஓடையில் நிரந்தரப்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோபி அருகே உள்ள சாணார் பதியில்சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் பூசாரிகள் 15 பேர் குடும்பத்துடன் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மயான பயன்பாட்டிற்கு  என அதே பகுதியில் சுமார் 75 சென்ட் பரப்பளவிலான இடத்தை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நஞ்ச கவுண்டன் பாளையத்தை சேர்ந்த ஒருவர் தானமாக கொடுத்து உள்ளார். அந்த மயானமானது தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் கீரிப்பள்ளம் ஓடைக்கு இடையே உள்ளது.

இந்த மயானத்திற்கு செல்ல அதே பகுதியில் கீரிப்பள்ளம் ஓடை மேல் சுமார் 4 அடி உயரத்தில் தரை மட்ட பாலம் கட்டப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டுக்கு முன் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராகவும், கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், அந்த தரை மட்ட பாலத்தை இடித்து விட்டு உயரமான  புதிய பாலம் கட்டி தருவதாக கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து உடனடியாக பழைய பாலம் இடிக்கப்பட்டு பூமி போடப்பட்டது..

ஆனால் பத்து ஆண்டுகளில் இதே போன்று மூன்று முறை பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் இதுவரை பாலம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் சாணார்பதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடலை சுமந்து கொண்டு, கீரிப்பள்ளம் ஓடையில்  சாக்கடை நீரில் இறங்கியே மயானத்திற்கு சென்று அடக்கம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சாணார்பதியை சேர்ந்த முருகையன்(70) என்பவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது, கீரிப்பள்ளம் ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றதால் இரவில் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே சுமார் 60 அடி நீளத்திற்கு தற்காலிக பாலம் அமைத்து முருகையனின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து  20 ஆயிரம் ரூபாய் செலவில் மூங்கில் மற்றும் பலகையால் தற்காலிக பாலம் அமைத்து முருகையனின் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.


இந்நிலையில் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து சடலத்தை எடுத்து செல்வது குறித்து தகொல் அறிந்த கோபி தாசில்தார் தியாகராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், , டி.எஸ்.பி ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது, இந்த பகுதியில் பாரியூர் கோயில் பூசாரிகள் குடும்பத்தினர் உட்பட 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எங்களுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த நிலக்கிழார் ஒருவர் மயானத்திற்கு என 76 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார்.கோயில் பூசாரிகள் அனைவரும் சிவ தீட்சை பெற்றவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் குழியில் உட்கார்ந்த நிலையிலேயே  அடக்கம் செய்வார்கள். அதனாலேயே இந்த மயான நிலத்தை தானமாக கொடுத்தனர்.

இதனால் வருடத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இறந்து போகும் நிலையில் மிகவும் சிரமத்துடனேயே உடலை அடக்கம் செய்து வருகிறோம்.  ஓடையில் தண்ணீர் குறைவாக உள்ள காலங்களில் ஓடைக்குள் இறங்கியே சடலத்தை எடுத்து செல்வோம். தற்போது ஓடையிலும் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், தடப்பள்ளி வாய்க்காலிலும் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு முறையும் இதே போன்று தற்காலிக பாலம் அமைத்தே மயானத்திற்கு சென்று வருகிறோம் என்றனர்.

10 ஆண்டுக்கு முன் புதிய பாலம் கட்டி தருவதாக கூறி, தரைமட்ட பாலத்தை இடித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இதுவரை மூன்று முறை அடிக்கல் நாட்டியும் பணிகள் தொடங்கவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டினர்.


Top