logo
கைத்தறி நெசவாளர்கள்,கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி: ஆட்சியர் தகவல்

கைத்தறி நெசவாளர்கள்,கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி: ஆட்சியர் தகவல்

01/Aug/2021 03:00:04

புதுக்கோட்டை, ஆகஸ்ட்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள்  மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சார்ந்த கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம், புதிதாக விரசாட் (VIRASAT)  திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டு முதல் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

இத்திட்டததின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள கைத்தறி நெசவாளர்கள்  மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் ஆகியோரின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது. 

மேற்கண்ட கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 90% பங்குத் தொகையும், டாம்கோ மூலம் 5% பங்குத் தொகையும், பயனடைவோர் மூலம் பங்குத் தொகை 5% ஆகும்.  இக்கடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது.  

மேற்படி கடன்தொகை பெற விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தவர், பார்சீயர், ஜைனர் ஆகியோரில் ஒருவராக இருத்தல் வேண்டும். 18 வயது நிறைவடைந்தவராக இருக்க  வேண்டும்.  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.  ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.98,000 மும், நகர்ப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.1,20,000  உடையவராக இருத்தல் வேண்டும்.  

பெறப்படும் கடன் தொகை 60 மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.  மேற்கண்ட கடன் பெற விண்ணப்பிக்க விரும்புவோர், எதிர்வரும் 20.08.2021 -க்குள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில்  உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். 

Top