logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவார கால கோவிட் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவார கால கோவிட் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது: ஆட்சியர் தகவல்

01/Aug/2021 12:50:20

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டத்தில்   கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கொரோனா விழிப்புணர்வு முகாம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை ஒருவார காலத்திற்கு நடைபெறுகிறது என மாலட்ட ஆட்சியர் கவிதாராமு.  

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கோவிட் மூன்றாம் அலை தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.  எனவே,  தமிழக அரசின் சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.50 லட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் கொரோனா விழிப்புணர்வு முகாம் 01.08.2021 முதல் 07.08.2021 வரை ஒருவார காலத்திற்கு தமிழகம் முழுவதும் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒருவாரம் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. 

இந்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்களிடையே கோவிட் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்குதல், சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் குறித்து பேருந்து நிலையங்கள், கடைவீதி போன்ற இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணைய வழியில் ஓவியப்போட்டி, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்துதல், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் விளம்பரம் செய்தல், குறும்படங்கள் வெளியிடுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இந்த ஒருவார காலத்திற்கு மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட உள்ளாட்சி அமைப்புகளை பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள தகுதி வாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போட்டு 100 சதவீதம் இலக்கை அடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி உள்ளிட்டோர்  பலர் கலந்து கொண்டனர். 


Top