logo
தமிழகம் முழுவதும் நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளை உருவாக்குங்கள்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளை உருவாக்குங்கள்: ஸ்டாலின் அறிவுறுத்தல்

25/Jul/2021 11:19:38

சென்னை, ஜூலை: தமிழகம் முழுவதும் நீர் ஆதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும், மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும், நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்(24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மாநில நிதி பணிகளான காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள், அத்திக்கடவு - அவினாசி நீர்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டம், காட்டூர், -தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி நீர்தேக்கம் அமைக்கும் திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரிகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்,

நபார்டு நிதியுதவியுடன் புதிய தடுப்பணைகள் கட்டுதல், அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகளை புனரமைப்பு செய்தல், செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் மற்றும் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும், நதிநீர் இணைப்புத் திட்டங்களான காவேரி -குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம், நீட்டித்தல்,

புனரமைத்தல் மற்றும் நவீனமையமாக்குதல் திட்டத்தின் கீழ் நொய்யல் உப வடிநிலம் புதிய கட்டளைக் கால்வாய், ராஜவாய்க்கால், கீழ்பவானி திட்டம், கல்லணைக் கால்வாய், காவேரி உப வடிநிலம் ஆகியவற்றில் நடைபெறும் புனரமைப்புத் திட்டங்கள் முக்கொம்பு மேலணை, ஆதனூர், குமாரமங்கலம் மற்றும் நஞ்சை புகளூர் ஆகிய இடங்களில் கட்டப்படும் கதவணை ஆகியவற்றின் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், விவசாயிகளின் நலன்கருதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் செப்பனிடவும், கால்வாய்களை சரி செய்யவும் முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், பொதுப்பணித்துறை சிறப்புச் செயலாளர் டி.ரவீந்திரபாபு, நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.ராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Top