logo
புதுக்கோட்டை உழவர் சந்தையில் வியாபாரிகள் பொதுமக்கள் திடீர்  போராட்டம்

புதுக்கோட்டை உழவர் சந்தையில் வியாபாரிகள் பொதுமக்கள் திடீர் போராட்டம்

16/Jul/2021 02:57:44

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை உழவர் சந்தைக்குள்ளே  இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் கடந்த 21 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களத காய்கறிகளை குறைந்த விலைக்கு கொடுக்காமல் நேரடியாக விற்பனை செய்வதற்காகவே  தி்முக ஆட்சியின்போது உழவர் சந்தை உருவாக்கப்பட்டது. 

அதன்படி இங்கு வியாபாரம் செய்யும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை பட்டாவை வேளாண் விற்பனை குழு அதிகாரிகளிடம் முறையாக சமர்பித்து அதன் பின்னர் அரசால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு தான் உழவர் சந்தைக்குள் விவசாயிகள் வியாபாரம் செய்ய முடியும்.  புதுக்கோட்டை உழவர் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுக்கொண்டு 21 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். 

 வெளிக்கடைகளால் விவசாயிகளின் விற்பனை பாதிப்பு: சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியே பல வியாபாரிகள் அடையாள அட்டை இல்லாமல் தற்காலிக கடை போட்டு காய்கறி வியாபாரம் செய்து வருவதால் தங்களுக்கு விற்பனை பாதிக்கபபடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்:  மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அரசு போக்குவரத்துக் கழகம்  பேருந்துகளை உழவர் சந்தைக்கு விடுவதை நிறுத்தி விட்டதால் தாங்கள் காய்கறிகளை சந்தைக்கு எடுத்து வரமுடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து  உழவர் சந்தை விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், நகராட்சி நிர்வாகத்துக்கும்  அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

நாங்கள் 2000 -ஆம் ஆண்டிலிருந்து தோட்டக்கலையின் மூலமாக விவசாய உழவர் சந்தை அடையாள அட்டை பெற்று எங்களின் விவசாயப் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகிறோம்.  தற்பொழுது புதிதாக குழுக்கடைகள் என்ற பெயரில் விவசாய கடைகளை வெளியாட்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

எங்களுக்கு விவசாய பொருட்களை விற்பதற்கு போதுமான கடைகள் இல்லை. ஆனால்  போக்குவரத்துக்கு இடையூறாகவும், உழவர் சந்தை வியாபாரிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

உழவர் சந்தையில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என உழவர் சந்தையில் கடை நடத்திவரும் விவசாயிகள்  கோரிக்கை மனு  அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அண்மையில் புதுக்கோட்டைக்கு வந்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உழவர் சந்தைக்கு வெளியே இடங்களை ஆக்கிரமித்து அமைத்துள்ள கடைகளையும், தள்ளுவண்டி கடைகளையும் அகற்றுவது சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இரு சக்கர வாகனங்களை அனுமதிக்க    வலியுறுத்தியும் புதுக்கோட்டை உழவர் சந்தையில்  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் மற்றும்  போலீஸார்   சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் ஆக்கிரமிப்பில் இருந்து கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். அதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Top