logo
ஈரோடு மாவட்டத்தில் கடை திறந்த  முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை...!

ஈரோடு மாவட்டத்தில் கடை திறந்த முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை...!

06/Jul/2021 09:18:43

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் கடை திறந்த  முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ. 3 கோடி முதல் ரூ. 4 வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் பண்டிகை, விசேஷ நாட்களில் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வந்தது. 

ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் காலை 6 மணி முதலே டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மது பிரியர்கள் மது வாங்க காத்து நின்றனர்.  மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மது பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய சரக்குகளை அள்ளிச் சென்றனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சில இடங்களில் மதுபானங்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மது பிரியர்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

அதேசமயம் பார்களில் உட்கார்ந்து மது அருந்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 138 பார்கள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 510 - க்கு சரக்குகள் விற்றுத் தீர்ந்தன.

குறிப்பாக பீர் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைப்போல் கூட்டம் அதிகம் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமேம் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top