logo
தருமபுரி அருகே பேரீட்சை சாகுபடியில் அசத்தும்  ஓய்வு பெற்ற அரசு ஊழியர்..!

தருமபுரி அருகே பேரீட்சை சாகுபடியில் அசத்தும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்..!

21/Jun/2021 08:35:26

பாலைவனப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது என கூறப்பட்டு நம்பப்பட்டு வந்த பேரீட்சையை நமது மண்ணிலும் விளைவிக்க முடியும் என  மாற்றி யோசித்து அசத்தி காட்டியிருக்கிறார் தருமபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்  வேல்முருகன்.

 காரிமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் அரசு போக்குவரத்து கழகத்தி்ல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தனது விவசாய நிலத்தில் பேரீட்சை சாகுபடி செய்து சாதனை செய்துள்ளார்.

பேரீட்சை சாகுபடியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் அதில் தரமான கண்டறியபட்ட பர்ரீ, அஜ்ஜூவா, கனீஜி, அலூவி, மெட்சூல், எலைட் போன்ற ரகங்களை தேர்வு செய்து ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடை இடையே பேரீட்சையை நடவு செய்துள்ளார், நடவு  செய்த மூன்று வருடத்திலேயே தற்போது முதல் அறுவடைக்கு  பேரீட்சை பழங்கள் தயாராகி நிற்கிறது.


ஜனவரியில் பேரீட்சை மரங்களில் பூக்கள் பிடித்து ஜூன், ஜூலை மாதங்களில் பழம் அறுவடைக்கு வந்துவிடுவதாகவும், வருடத்திறகு ஒரு முறை பலன் தரக்கூடிய இந்த பேரீட்சையை மற்ற விவசாயாகளும் நம்பிக்கையோடு பயிர் செய்து வருமானம் ஈட்டலாம் என  வேல்முருகன் தெரிவித்தார்.

அரியக்குளம் கிராமத்தில் பல வருடமாக பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் அனுபவம் பெற்ற விவசாயியான நிஜாமுதீன், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின் பேரிலும், அவரிடமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபட்ட பேரீட்சை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி நடவு செய்ததாகவும்  வேல்முருகன் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை குறைந்து வருவதால்  விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. விவசாயத்தை விட்டு மாற்றுத்தொழிலை நாடிச் செல்லும் நிலையில், இருக்கின்ற தண்ணீரையே சிக்கனமாக பயன்படுத்தி பேரீட்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளும் வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வேல்முருகன்

Top