logo
வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை.

வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை.

01/Oct/2020 11:32:04

இது குறித்து, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தலைவர் கி.வெ. பொன்னையா, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்புச் செயலர் கி.வடிவேல், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் .எம்.முனுசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்(சிபிஐ) மாநிலத் துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, தமிழக விவசாயிகள் சங்கம்( கே.சிமாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:   

 கொரானோ நெருக்கடியும் அதற்கான கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்ததால் தமிழகம் முழுவதுமே வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் நிறுத்தப்பட்டன.    கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்டர் மாதம் முடிய 7 கூட்டங்கள் நடத்தப்பட வில்லை.  தளர்வுகள் படிப்படியாக நடைமுறைக்கு வரத் தொடங்கியவுடன்பல மாவட்டங்களில் காணொலி வழியாக வேளாண் குறை தீர் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்ஈரோடு மாவட்டத்திலும் இது போல கூட்டத்தை நடத்த மாவட்ட நிருவாகம் முன் வரவேண்டுகிறோம்.

வேளாண் குறை தீர்க்கும் கூட்டங்கள் ஒப்பீட்டளவில் ஜனநாயக வழியில் பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்க்க வழிவகுத்தது.     தற்போது இயல்பான வேளாண் பணிகள் நடந்து வருகின்றன.நடவுப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதிலுள்ள பல்வேறு சிக்கல்களை தொகுப்பாக முன்வைத்து தீர்க்க கூட்டம் நடத்துவது அவசியமாகிறதுகீழ்பவானி ஆயக்கட்டுப் பகுதியிலிருந்து ஆயக்கட்டில் இல்லாத பகுதிகளுக்கு பாசன நீரைக் கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்து வருகிறது.


மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் உள்ள கரும்பு நிலுவைப் பண பிரச்சனை பற்றி பேச வேண்டியுள்ளது.   ஆவின் கூட்டுறவு சங்கத்திலிருந்து விவசாயிகளுக்கு பால்கொள்முதல் செய்த பணம் கொடுக்கப்படாமல் நிலுவை நீடித்து வருகிறது.     அத்துடன் விவசாயிகளைப் பாதிக்கின்ற உயர் மின்கோபுர பிரச்னையில் இழப்பீடு இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.அதே போல IDPL திட்டம் தொடர்பாக வருவாய்த்துறைக்கும் உழவர்ளுக்கும் இடையில் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் உள்ளதன. இத்தகைய சூழலில்,மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் எடுத்து அக்டோபர் மாத வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Top