logo
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை ஊடக நிறுவனங்கள் உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை ஊடக நிறுவனங்கள் உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

17/May/2021 06:35:30

தமிழக அரசு ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ள வேளையில் ஊடக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஊடக நிர்வாகங்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென  தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்  வெளியிட்ட  தகவல்: கோவிட் 19 தொற்று இந்தியாவில் நுழைந்தது முதல் இதுவரை 250-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கொரானா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள நெருக்கடியான இன்றைய நிலையை கருத்தில் கொண்டு அவசரமான தேவைகளை ஊடக நிறுவனங்கள் நிறைவேற்ற அரசு ஆவண செய்ய வேண்டும்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் ஊடக நிர்வாக பிரிவு ஊழியர்களுக்கும் உரிய நிவாரணத் தொகை அளிக்க வேண்டும்ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

2-ஆம் அலை தொற்று பரவும் இக்காலத்தில் ஊடகவியலாளர்களை களத்திற்கு சென்று செய்தி சேகரிக்க அனுப்பக் கூடாது என நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும். அலுவலகத்திற்கு வந்து பணி புரியாமல் வீட்டிலிருந்து ஊடகத்தினர்  வேலை செய்யும் முறையை பின்பற்றினால் பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் பயன்பெறுவர்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும் அறிவுறுத்துவும். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்து, ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உடனடியாக மருத்துவக் காப்பீடு எடுத்துதர வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் ஆபத்தான சூழ்நிலையிலும், கொரோனா குறித்த விழிப்புணர்வையும், அவசியமான தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்வதற்காக, ஊடகவியலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இதை உணர்ந்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமாறு  அந்த மையம்  வலியுறுத்தியுள்ளது.

Top