logo
பயணிகள் எண்ணிக்கை குறைவால் வருவாய் இழப்பு: ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத தனியார்  பேருந்துகள்  இயக்கம்

பயணிகள் எண்ணிக்கை குறைவால் வருவாய் இழப்பு: ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத தனியார் பேருந்துகள் இயக்கம்

27/Apr/2021 03:46:23

ஈரோடு, ஏப்: பயணிகள் எண்ணிக்கை குறைவால் வருவாய் இழப்பு: ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத தனியார்  பேருந்துகள்  இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலைமணி வரை  பேருந்து  போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  பேருந்து  போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 11  பணிமனைகளில் 730-க்கும் உள்ளூர், வெளியூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் வெளியூர்களுக்கு என 269 தனியார்  பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தனியார்  பேருந்துகள்  இயக்கப்பட்டு வந்தன.

ஈரோடு மாவட்டத்திற்குள், சேலம் ,திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மேட்டூர், கோவை, பழனி போன்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தனியார்  பேருந்து  போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தற்போது கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதால் பேருந்துகளில்  பயணம் செய்வதை பெரும்பாலான  மக்கள் விரும்பவில்லை. இதனால் காலை நேரங்களில் இயக்கப்படும் தனியார்  பேருந்துகள்  குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படும் தனியார்  பேருந்துகளில்   பணிகளின் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. இதனால் தனியார்  பேருந்துகளின் வருவாயில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக  தற்போது மாவட்டத்தில் 70 சதவீத தனியார்  பேருந்துகள்  மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை உயர்வு, பேருந்து ஓட்டுனர்கள் , நடத்துனர்களுக்கு   ஊதியம்  அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக  தனியார்  பேருந்து  உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Top