logo
வேளாண் சாகுபடியில் இழப்பைத் தவிர்க்கும் பயிர் மருத்துவ பரிசோதனை..! நாடு முழுவதும்  விவசாயிகளிடம் வரவேற்பை பெற்ற புதிய முயற்சி

வேளாண் சாகுபடியில் இழப்பைத் தவிர்க்கும் பயிர் மருத்துவ பரிசோதனை..! நாடு முழுவதும் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்ற புதிய முயற்சி

08/Apr/2021 06:56:52

புதுக்கோட்டை: விலை மதிக்க முடியாத மனித உயிர்களின் நோயற்ற வாழ்வுக்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக  இந்தியாவில் கிராமப்புற மக்களின் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து அவர்களது ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மருத்துவத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்று  மருத்துவ பரிசோதனை, ஆலோசனை முகாம்களை நடத்தி  வருகின்றன.

ஆனால், மனித இனமும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் உயிர் வாழத்தேவையான பல்வேறு காரணிகளில் மிகவும் முக்கியமான உணவை தரக்கூடிய  விவசாயத்தொழில்  ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா என்ற கேள்வி்க்கு இல்லை என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். நமது நாட்டைப் பொருத்தவரை மகாத்மா காந்தியின் கூற்றுப்படி விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால், அது பல்வேறு காரணங்களால் வளைந்து நெளிந்து கூன் விழுந்து கிடக்கிறது. இதை நிமிர்த்தினால் மட்டுமே  உணவு உற்பத்தியில் நம்நாடு தலைமை  நிமிர்ந்து நிற்கமுடியும் என்பதே அனைவரின்  எதிர்ப்பார்ப்பு. விவசாயத்தை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்  நீடித்து வரும் தொய்வு நிலையை சரி செய்ய தீவிர கவனம் செலுத்த வேண்டும்  என்பதே வேளாண் ஆர்வலர்களின் ஆதங்கம்.


இச்சூழலில்,  மக்களின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்ய சிறப்ப மருத்துவமுகாம்கள் நடத்தப்படுவதைப் போல எம்.எம். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்து அதில்  ஏற்படும் பாதிப்புகளை  குறைத்து  விவசாயிகளின்  வருவாய் இழப்பை தடுக்க முடியும் என்ற நோக்கில் பயிர் மருத்துவ முகாம் திட்டத்தை முன்னெடுத்து தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இது  விவசாயிகளிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.


இத்திட்ட செயல்பாடுகள் குறித்து  எம்.எம். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் ஆர். ராஜ்குமார் அவர்களுடன் நடத்திய  நேர்காணல்:இத்திட்டத்தின்  அடிப்படை நோக்கம் ?


எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண் மற்றும் உயிர் அறிவியலுக்கான சர்வதேச மையமும் இணைந்து பயிர் மருத்துவ முகாம் என்ற திட்டத்தை  புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 2012-இல் தொடங்கியது. விவசாயிகள் மத்தியில் பயிர் மருத்துவ முகாமிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஒடிஸா, அஸ்ஸாம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.


  உலக உணவு நிறுவனம் இந்தியாவில் 25 சதவிகிதம் விளைச்சல் இழப்பு, பூச்சி நோய்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றது என கணக்கிட்டுள்ளது. எனவே, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களால் ஏற்படும் பிரச்சனைகளை முறையாக கண்டறிந்து துல்லியமான தீர்வுகளை சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கும் சரியான களமாக இந்த பயிர் மருத்துவ முகாம் திகழ்கிறது. 


மக்களின் உடல் ஆரோக்கியம் பயிர்களின் ஆரோக்கியம்  எவ்வாறு  ஒப்பிடலாம் ?


பயிர் மருத்துவ முகாமை எளிமையாக புரிந்து கொள்ள, மனிதர்களுக்கான மருத்துவமனைகளுடன் ஒப்பிடலாம். மனிதர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவர் நன்கு பரிசோதித்து பின்பு உரிய மருந்துகளை வழங்குவார். அதே அணுகுமுறைதான் பயிர் மருத்துவ முகாமில் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவ முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்து விவசாயிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படும்.


விவசாயிகளுக்கு கிடைக்கும் நேரடி  பயன்கள் ?


 முகாமுக்கு  விவசாயிகள் கொண்டு வரும்  பாதிக்கப்பட்ட பயிர்களின் மாதிரிகளை பயிற்சி  பெற்ற பயிர் மருத்துவர்கள்    நுண்ணோக்கி மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் பிரச்னைகளை கண்டறிந்து உரிய தீர்வுகளை பரிந்துரைக் கின்றனர். மேலும், பரிந்துரைகள் விவசாயிகளின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாகவும்  அவர்களுக்கு தெரிந்த மொழியில் அனுப்பப்படுகிறது. பரிந்துரைகளில் உள்ள விவசாய இடுபொருட்ளை விற்பனையாளர்களிடம் காண்பித்து உரிய இடுபொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். 


பயிர்களை பரிசோதிக்கும் அலுவலர்களின் தகுதிகள், செயல்பாடு ?


வேளாண் பட்டம் பெற்றவர்கள் பயிர் மருத்துவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நுண்ணோக்கி மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி பயிர்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை துல்லியமாக கண்டறிதல், இயற்கை முறையில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத, விவசாயிகள் வசிக்கக்கூடிய பகுதியில் கிடைக்கக்கூடிய இடுபொருட்களை பரிந்துரைப்பது போன்ற பிரிவிகளில் 15  நாட்கள்  பயிற்சி அளிக்கப்படுகிறது.  மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிந்துரைகளை வழங்க அவ்வப்போது புத்துணர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிர் மருத்துவமுகாம்கள் நடைபெறும் நாள், நேரம், இடம் ஆகியவை விவசாயிகளிடம் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஏற்றவாறு நடத்தப்படுவதால் பயிர் மருத்துவ முகாம்கள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.


பெண் விவசாயிகளிடம்  எந்த அளவுக்கு  இத்திட்டம்  தாக்கத்தை  ஏற்படுத்தியது ?


 புதுக்கோட்டை மாவட்டம் , திருமலைராயசமுத்திரம் கிராமத்தைச்  சேர்ந்த பெண் விவசாயி முத்துலெட்சுமி   உரிய நேரத்தில் பயிர் மருத்துவர்கள் கொடுத்த பரிந்துரைகள் தனது நெற்பயிரில் ஏற்பட்ட பிரச்னையை குறைந்த செலவில் தீர்க்க உதவியது. மேலும், தனது அலைபேசி எண்ணிற்கு வந்த பரிந்துரை குறுஞ்செய்தியை  அவருடைய  குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக விவசாயிகளிடையே  பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.  பயிர்களில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது.  இது தன்னை போன்ற பெண்களுக்கு பயிர் மருத்துவ முகாமிற்கு  செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்று பயிர் மருத்துவ முகாமைப் பற்றி  அவர் குறிப்பிட்டது  இத்திட்டத்துக்கு கிடைத்த வெற்றி.


இது வரை நடத்தப்பட்ட முகாம்கள்... பயனடைந்த விவசாயிகள்  ?


 இதுவரையில், 2422 பயிர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,372 பெண் விவசாயிகள் உட்பட 38,557 விவசாயிகள் பங்கேற்றனர். 33,679 பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. நெல், உளுந்து, கத்தரி, நிலக்கடலை, மல்லிகைப்பூ, மக்காச்சோளம் ஆகியவை பயிர் மருத்துவ முகாமிற்கு எடுத்துவரப்பட்ட முக்கிய பயிர்களாகும். பயிர் மருத்துவ முகாம் விவசாயிகளுக்கு எவ்வாறு பயனளித்துள்ளது என்பதை முறையாக ஆய்வு செய்ததில் விவசாயிகளிடையே பயிர் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.


விவசாயிகளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் ?

 

இந்த பயிர் மருத்துவ முகாம்கள் மூலம் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளார்கள். 55 முதல் 65 சதவிகிதம் அளவில் இடுபொருட்கள் செலவு குறைந்துள்ளது. 12 முதல் 15 சதவிகிதம் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 12.5 முதல் 16 சதவிகிதம் வரை நிகர வருமானம் அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் வேளாண் துறையுடன்  ஒருங்கிணைந்து செயல்படுவது பயிர் மருத்துவ முகாமின் சிறப்பம்சம். 


இத்திட்டத்தின்  பரவலாக்கம்  எதை நோக்கி பயணிக்கிறது  ?


பயிர் மருத்துவ முகாம் பயிர்களில் ஏற்படும் பிரச்னைகளை முறையாக ஆய்வு செய்து, சரியான பரிந்துரைகளை வழங்குவதால் பிரச்னைகள் உடனுக்குடன்  தீர்க்கப்பட்டு விளைச்சலை அதிகரிக்க உதவுவதால் விவசாயிகளிடையே பயிர் மருத்துவ முகாம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முயற்சி அனைத்து விவசாயிகளையும் சென்றடைய செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.  தொலை நோக்குத்திட்டமும் அதுதான்  என்றார் எம்.எஸ். ஆராய்ச்சிநிறுவன விஞ்ஞானி முனைவர் ஆர். ராஜ்குமார்.

Top