logo
இன்றைய தகவல்..உணவே மருந்து.. சாத்துக்குடி பழம்..

இன்றைய தகவல்..உணவே மருந்து.. சாத்துக்குடி பழம்..

25/Feb/2021 08:34:00

இனிப்பு சுவையுடைய உணவு பொருட்களின் வரிசையில் வாழைப்பழம், ஆரஞ்சு, கிர்ணிப்பழம், இலந்தை பழம் இவைகளை நாம் ஏற்கனவே புளிப்பு சுவை கலந்தள்ள உணவுப் பொருட்கள் வரிசையில் பார்த்துள்ளோம்.


 இந்தப் பழங்களில் உப்பு சுவையும் கலந்துள்ளதாக சித்த மருத்துவக் குறிப்புகள் பதிவு செய்கிறது.இனிப்பு சுவை வரிசையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சாத்துக்குடி பதில் உப்பு சுவையும் கலந்துள்ளது..

சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன. சாத்துக்குடியில் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. சாத்துக்குடியின் ஜூஸில் மட்டுமின்றி, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதன் தோலை உலர வைத்து பொடி செய்து, குடிக்கும் பானங்களில் சிறிது சேர்த்து குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும்.


இரைப்பைக் கோளாறுகளான அஜீரண பிரச்சனைகள், மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவற்றை சரிசெய்ய சாத்துக்குடி உதவும். இதற்கு குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளைத் தடுக்கும் திறன் உள்ளது. மேலும் இது இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும். முக்கியமாக இதனை காரமான அல்லது சூடான உணவுகளை உட்கொண்ட பின் குடித்தால், செரிமானம் சீராக நடைபெறும்.


காலையில் எழுந்ததும் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அது அடிநா சதையில் உள்ள அழற்சியை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அடிநா சதை அழற்சியானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படக்கூடியவை. சாத்துக்குடியில் உள்ள வைட்டமின் சி, இந்த அழற்சியை எதிர்த்துப் போராடி, உடலை நோய்த்தொற்றுக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.


சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கும். அதுவும் இது கார்போனிக் அமிலம் மற்றும் வாய்வை வெளியேற்றி, செரிமானத்தை மேம்படுத்தும். ஆய்வுகளில் சாத்துக்குடி ஜூஸ், குடலின் இயக்கத்தை அதிகரித்து, நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால், சாத்துக்குடி ஜூஸை சில நாட்கள் தொடர்ந்து குடித்து வாருங்கள்.


எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையோடு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடிப்பது நல்லது. அதிலும் 2-3 மாதங்கள் தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், இரத்தத்தில் உள்ள நச்சுமிக்க பொருட்கள் மற்றும் மெட்டபாலிச கழிவுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே இரத்தத்தை சுத்தம் செய்ய நினைப்போர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.


காலையில் தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். ஆய்வு ஒன்றில் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், தொற்றுக்களால் சுவாச பாதை சுருங்குவது தடுக்கப்படுவதோடு, சுவாச பாதையில் உள்ள தசைகளை மென்மையாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.


பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ஜூஸ் எதையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். ஒருவர் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர உட்பொருட்கள், உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தியின் அளவு அதிகரிக்கும்.


வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படுவது தான் ஸ்கர்வி என்னும் ஈறு நோய். இந்த வைட்டமின் சி சாத்துக்குடியில் ஏராளமான அளவில் உள்ளது. எனவே சாத்துக்குடி ஜூஸை நாள்தோறும் தவறாமல் குடித்து வந்தால், இந்த கொடிய ஈறு நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம..


சாத்துக்குடி ஜூஸ் புளிப்பாகவும், அதிக அசிடிட்டி கொண்டதும் கூட. இத்தகைய சாத்துக்குடியை ஒருவர் தினமும் ஜூஸ் வடிவில் எடுப்பதால், உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்கப்பட்டு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கீல்வாதம் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கப்படும். மேலும் சாத்துக்குடி ஜூஸ் திசுக்களில் யூரிக் அமிலம் தேங்குவதைத் தடுக்கும். இதன் விளைவாக வாத நோய் ஏற்படும் அபாயமும் குறையும்.


காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களால் சரும திசுக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும் இது முகத்தில் அடிக்கடி வரும் பிம்பிளை நீக்குவதோடு, முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களையும் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை தூண்டிவிட்டு, சருமத்தை எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ளும்.


தொண்டைப்புண் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரால் சாத்துக்குடி ஜூஸில், 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்துக்க வேண்டும். மேலும் இப்படி குடிக்கும் போது தொண்டையில் சிறிது நேரம் ஜூஸை வைத்து மெதுவாக விழுங்கினால் தொண்டையில் உள்ள புண் குணமாகிவிடும்.தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளையில் செரடோனின் உற்பத்தியைத் தூண்டி, உடல் மற்றும் மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும்.


காலையில் எழும் போது பலரும் கடுமையான வாய் துர்நாற்றத்தை சந்திப்பார்கள். தினமும் காலையில் முகத்தைக் கழுவி, பற்களைத் துலக்கும் முன் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். ஒருவேளை பற்களைத் துலக்கிய பின் குடித்தால், அதில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை அரித்துவிடும்.காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸைக் குடித்தால், அது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, உடலின் மெட்டபாலிச செயல்முறையை அதிகரித்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது..


சாத்துக்குடியில் உள்ள சத்துக்கள், கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, உடலை சுத்தம் செய்யும் ஆற்றல் உள்ளது.சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் நோய்க்கிருமி விளைவால் ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதைக் குறைப்பதோடு, அதன் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கவும் செய்கிறது. 


சாத்துக்குடி ஜூஸில் இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுத்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது...

எனவே சாத்துக்குடியின் அருமை பெருமைகளை தெரிந்துகொண்டு அதை அளவோடு நமது ஆரோக்கியத்திற்காக உணவாக சேர்த்து கொண்டால் நோய் வரும்முன் நம்மை காத்துக்கொள்ளலாம். தொகுப்பு- சங்கரமூர்த்தி- 7373141119.

Top