logo
 புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரில் ரூ.56.31 கோடி மதிப்பீட்டில் 1,603 வீட்டுமனைகள் கொண்ட துணைக் கோள் நகரம் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூரில் ரூ.56.31 கோடி மதிப்பீட்டில் 1,603 வீட்டுமனைகள் கொண்ட துணைக் கோள் நகரம் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டி வைத்தார்

24/Feb/2021 11:52:06

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூரில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து  முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள துணைக் கோள் நகரத்திற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்  அடிக்கல் நாட்டினார். 


பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.  புதுக்கோட்டையில் சில ஆண்டுகளுக்குமுன்னர் நடைபெற்ற  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முள்ளூர்  கிராமத்தில் புதிய துணைக் கோள் நகரம் அமைக்கப்படும் என முதல்வர்   அறிவித்தார். 

அதனடிப்படையில்  புதன்கிழமை  முள்ளூர் கிராமத்தில் புதிய துணைக் கோள் நகரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த துணைக் கோள் நகரம் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.31 கோடி மதிப்பீட்டில் 1,603 வீட்டுமனைகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

இதில் உயர் வருவாய் பிரிவில் 339 மனைகள் ஒவ்வொன்றும் தலா 2,711 சதுரஅடி பரப்பளவிலும், மத்திய வருவாய் பிரிவில் 280 மனைகள் தலா 2,325 சதுரஅடி பரப்பளவிலும், குறைந்த வருவாய் பிரிவில் 218 மனைகள் தலா 1,453 சதுரஅடி பரப்பளவிலும், பொருளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவில் 766 மனைகள் தலா 431 சதுரஅடி பரப்பளவிலும் என மொத்தம் 1,603 வீட்டு மனைகள் அமைக்கப்பட உள்ளன. 


இந்த துணைக் கோள் நகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு, 80 அடி, 60 அடி மற்றும் 40 அடி அகல தார்ச்சாலைகள், ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி மனை, வணிக மனைகள், பொது உபயோக மனை மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மனைப் பிரிவாக இது அமைக்கப்பட உள்ளது. 

மேலும் இத்துணைக் கோள் நகரம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகிலும், புதுக்கோட்டை பேருந்து நிலையம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவி்லும்  தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி-காரைக்குடி சுற்றுச் சாலைகளுக்கு இடையில் அமைந்துள்ள சிறந்த மனைப் பிரிவாகும்.

எனவே பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள துணைக் கோள் நகரப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் . 

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் மனோகரன், மேற்பார்வை பொறியாளர் சாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத் தலைவர் க. பாஸ்கர், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் எஸ்.ஏ.எஸ். சேட் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 


Top