logo

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பில் நாளை (23-09-2020) நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்

22/Sep/2020 01:06:11

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்கள், கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதியம் மறுப்பு, ஊதிய வெட்டு, வேலைமறுப்பு, வேலையிழப்பு, நலவாரியச் செயல்பாடுகளில் தன்னிச்சையான மாற்றங்கள் ஆகியவற்றை கண்டித்தும், கைவிடக்கோரியும் மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அறைகூவலை ஏற்று 23-09-2020 புதன் அன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, நம்பியூர், சத்தி, பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் AITUC, CITU, LPF, INTUC, HMS, MLF, LTUC, TTSF ஆகிய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்து சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் காலை 10.00 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு அருகிலும், காலை 11.30 மணிக்கு சென்னிமலை ரோடு, ஐடிஐ பின்புறம் உள்ள தொழிலாளர் /நலவாரிய  அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 மத்திய பாஜக அரசு நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக சுருக்கி, பல்லாண்டுகாலம் போராடிப்பெற்ற தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஏற்கனவே ஊதியம் தொடர்பான சட்டதொகுப்பை நாடாளுமன்றத்தில்நிறைவேற்றியுள்ளது. தற்போது தொழிலுறவு மசோதா மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு, சுகாதாரம், வேலை சூழல் உள்ளிட்ட மசோதாக்களை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  

தமிழகத்தின் பல்வேறு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில், கொரோனா காலத்துக்கு ஊதியம் வழங்க மறுப்பது குறித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இது குறித்து நேரடியாக பேசவோ அல்லது மாநில அரசு தலையிட்டு தீர்வு செய்யவோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பின்வரும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 


கோரிக்கைகள்:1.கொரோனா காலத்துக்கு சம்பளம் வழங்கு! வேலைநீக்கம் ஊதியக் குறைப்பு செய்யாதே. 

2. ஊதியக் குறைப்பு, வேலைநீக்கம் உள்ளிட்ட கொரோனாவுக்கு பிந்தைய கால தொழிற்தாவாக்களை உடனடியாக எடுத்து, அழைத்துப் பேசி தீர்வு செய்.

3. கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் வாரியங்களில் பதிவுசெய்ய, ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயமாக தொலைபேசி வைத்திருந்து அதை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்ற கொடூர நிபந்தனையைக் கைவிடு. OTP கேட்காதே.

4. பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், வருமானவரி    செலுத்தும் அளவுக்கு வருவாய்  ஈட்டாத குடும்பங்கள் அனைத்துக்கும்  ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு, தலா ரூ.7,500 வீதம் ரூ.22,500 நிவாரணம் வழங்கு

5. புலம்பெயர் தொழிலாளர் சட்டப்படி, தொழிலாளர்களை பதிவு செய்வதையும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடு.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை விலக்கிக் கொள்.

6. இந்திய மக்களின் பொதுச் சொத்தான பொது துறைகள் அரசுத் துறைகளை தனியார் மயப்படுத்தும் சீரழிவு நடவடிக்கைகளை நிறுத்து.

7.  44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக முதலாளிகளுக்கு சாதகமாக சுருக்குவதையும், அதையும் தாண்டி பாஜக ஆளும் மாநிலங்கள் வழியாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துதல்,

தொழிற் தகராறு சட்ட விதிமுறைகளை இன்னும் மோசமாக சீர்குலைத்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிடு!

மேற்கண்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர் முகக்காப்பு, தனி  நபர்  இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அனைத்து சங்கங்களின் சார்பில் ஈரோடு எஸ். சின்னசாமி தகவல் தெரிவித்துள்ளார்.தொடர்புக்கு... 9442522355.

Top