logo
புதுக்கோட்டையில் வீட்டில் நூலகம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சுதந்திரராஜன்

புதுக்கோட்டையில் வீட்டில் நூலகம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சுதந்திரராஜன்

17/Nov/2020 11:19:51

புதுக்கோட்டை: தனது வாழ் நாள் சேமிப்பையெல்லாம்  அரிய வகை நூல்களை  சேகரித்து வீட்டருகே தனி நூலகம் அமைத்து உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி-டோரதி தம்பதியரின் ஞானாலயாக நூலகம் முதல் பதிப்பு நூல்களை  தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்தது.இந்த நூலகம்  புதுக்கோட்டையின் பெருமை மிகு அடையாளமாகவும் பலருக்கும் முன்னோடியாகவும்  அறிவு வெளிச்சத்தைக் காட்டும் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்து வருகிறது.

அதை முன்னுதாரணமாகக் கொண்டு பலரும் வீட்டில் வசதிக்கேற்ப நூலகம் அமைத்து வருகின்றனர். அவர்களில், புதுக்கோட்டைசின்னப்பா நகரை  சேர்ந்த ஒய்வு பெற்ற  காவல்துறையில் ஐ ஜி யின் நேர்முக உதவியாளராக இருந்த ச. சுதந்திரராஜன் தனது வீட்டில் விலை உயர்ந்த புத்தகங்கள்  மற்றும் நாவல்கள் என சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பில் 10ஆயிரத்திற்கும்  மேற்பட்ட புத்தகங்களை  சேகரித்து நூலகமாக வைத்துள்ளார். 

தினமும் ஒய்வு நேரங்களில் தனக்கு பிடித்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பது தான் இவரின் பொழுதுபோக்கு    அம்சமாகும் .  ச. சுதந்திரராஜன் மனைவி ஓய்வு பெற்ற  ஆசிரியை  சு. விஜயலட்சுமியும் இவருக்கு உறுதுணையாக    புத்தகங்களை  வாசிப்பதில்  இளம் வயதிலிருந்தே வளமைபெற்றவர்.    மேலும்,   தனது குடும்பத்தினரையும்  புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு  உள்படுத்தியுள்ளார்.

 தற்போது  கொரனா வைரஸ் பாதிப்பால் பள்ளிக்கூடங்கள் இல்லாததால் தன்னுடைய பேரக்குழந்தைகளும்  ஆன்லையன்கல்வி முடிந்ததும்   புத்தகம் வாசிக்கும்  நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மேலும்,  அக்கம் பக்கம் உள்ள சிறியவர்கள் , பெரியவர்கள் வரை புத்தகங்களை வாசிக்க எடுத்தும் செல்கின்றனர். விரைவில் அனைவருமே  புத்தகங்கள் வாசிக்கும் வகையில் அருகாமையில் சிறிய நூலகத்தையும் நிறுவ திட்டமி்ட்டுள்ளார்.

 நூலகம்பற்றி ச.சுதந்திரராஜன் கூறியதாவது:  தினமும்   புத்தகம் வாசிக்கும்      உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார். வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை.

 எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.

பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து,புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள் என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள் என்று கேட்டால் அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும் என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற நல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்ற சிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர். நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை.

கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.

நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சோவியத் ரஷியாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் 12 மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது.

ரஷியா  இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப் பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் கற்றனைத்தூறும் அறிவு என்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.

உங்கள் துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். சில நூல்களைச் சொந்தமாகவும், வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் எந்த துறையில் சிறப்புப் பெற விரும்புகிறோமோ அல்லது வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்ற உள்ள அல்லது போட்டித் தேர்வு எழுத உள்ள பாடம் எது எனத் தீர்மானித்து விட்டாலோ அந்தப் பாடத்தில் உள்ள வேறு சில சிறந்த நூல்களையும் படிக்க வேண்டும்.

நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல் களைப் படிப்பதால் துறையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிற அங்கீகாரங்களும் அவர்களைத் தேடி வரும்.

மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள்.

அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறசுயமுன்னேற்றநூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.

நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன், டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே.

எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும்.எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை.

 முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்த நூலகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்     என்றும்   ச.  சுதந்திரராஜன்  தெரிவித்தார். (9442616009). 

 இந்தியா சுதந்திரம் பெற்ற    1947ம் வருடம்    ஆகஸ்ட் 15 -ஆம் தேதி    இவர் பிறந்ததால் .சுதந்திரராஜன் என்று  இவரது தாய் தந்தையர் பெயர் வைத்துள்ளனர். அனைத்து இலக்கிய கூட்டங்களிலும் தவறாது  பங்கேற்று  உள்ளார். சேவை மனப்பான்மை கொண்டவர்    என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .  நேர்காணல்.. டீஸக்ஸ் ஞானசேகரன், புதுக்கோட்டை. 

Top