logo

இன்றைய சிந்தனைக் கதை..பிறர் பசி ஆற நம் பிணிகள் அழியும்..!

12/Nov/2020 09:04:35

பிறர் பசி ஆற நம் பிணிகள் அழியும்..!

ஓர் பிச்சைக்காரன் தினம் கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்! ஒருநாள் அந்த கோயிலுக்கு ஒரு முனிவர் வந்தார்! சில பக்தர்கள் அவர் பாதத்தை வணங்கி தங்கள் குறைகளை கூறினர். முனிவரும் பரிகாரம் கூறினார். 

அதைப்பார்த்த பிச்சைக்காரன் அவரிடம் சென்று வணங்கி, சாமி, நான் பிறந்ததில் இருந்து அனாதையாக பிச்சை எடுத்து ஜீவிக்கிறேன். எனக்கு விமோசனமே இல்லையா? சாமி என்று கேட்டான். அதற்கு சாமிகள், அப்பா உன் விதி பிச்சை எடுத்து தான் வாழவேண்டும் என்றுள்ளது என்றார். விதியை மாற்ற பரிகாரம் சாமி என்றான். 

பரிகாரம் இறைவனைத்தான் கேட்க வேண்டும் என்றார்! அதற்கு பிச்சைக்காரன், சாமி இறைவன் எங்கிருக்கிறார்? இந்த கோயிலில் இல்லையா என்றான். உடனே சாமி, கோயில்கள் இறைவனின் நிழல்கள், நீ நேரடியாக பார்க்க வேண்டுமென்றால் கிழக்கு திசையில் போய்க்கொண்டேயிரு, வழியில் வரும் பிரச்னைகளை நீதான் சமாளிக்க வேண்டும். உன் மன உறுதி பார்த்து இறைவன் தோன்றுவார். 

அப்போது நீ புத்திசாலித்தனமாக வார்த்தைகளை உபயோகித்தால் உன் விதி மாறும் என்று ஆசீர்வதித்தார். ஆசி பெற்ற பிச்சைக்காரன் கிழக்கு நோக்கி பயணம் செய்தான்.வெகுநேரம் நடந்து வந்ததால்  இரவானது, வழியில் ஒரு பெரிய மாளிகை போன்ற வீடு.அங்கு சென்று அந்த வீட்டு செல்வந்தரை சந்தித்து இரவு திண்ணையில் தங்கிபோக அனுமதிகேட்டான். 

அந்த செல்வந்தரோ நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க தன் விதிமாற இறைவனைக் காணப்போவதை விளக்கினான்.அதைக் கேட்ட செல்வந்தர், அவனுக்கு உணவு கொடுத்து தங்கவைத்து, காலையில் போகும்போது, தம்பி எனக்கு திருமண வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் பிறவி ஊமை அவளை பேசவைக்க கடவுளிடம் கேட்பாயா என்றார்.பிச்சைக்காரனும் கேட்பதாக கூறி நடக்க ஆரம்பித்தான். 

வழியில் ஒரு பெரிய மலை, அதை தாண்ட வேண்டுமே என்று தவித்து நின்றான்.அங்கு ஒரு மந்திரவாதி கோலோடு நடந்து வந்தவர் இவனைப்பார்த்ததும் தம்பி எங்கு போகவேண்டும் என்று கேட்க, விவரத்தை சொன்னான். 

உடனே மந்திரவாதி, மலையை தாண்ட மந்திரக்கோலால் வழி செய்து கொடுத்து விட்டு, தம்பி இந்த வழியில் போ. நான் 300-ஆண்டுகளாக முக்தி அடைய முயல்கிறேன் கிட்டவில்லை.கடவுளைப் பார்த்தால் நான் முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வரச்சொன்னார். பிச்சைக்காரனும் சம்மதித்து மந்திரவாதி காட்டிய வழியில் மலையை கடந்தான்.

 வெகுதூரம் சென்றதும் ஒரு பெரிய ஆறு, அதை எப்படி கடப்பது என்று கரையோரம் மலைத்து நின்றான். அந்த ஆற்றிலிருந்து ஒரு ஆமை வந்து அவனிடம் விவரம் கேட்டறிந்து, அவனை தன்மேல் ஏறச்சொல்லி கரை தாண்டிவிட்டு விட்டு, தான் பறக்க இரெக்கைகள் வேண்டும் கடவுளிடம் கேட்டு வரச் சொன்னது. ஆகட்டும் என்று சம்மதித்து சென்றான். 

வழி எங்கும் காடாக இருந்தது, கடவுள் வரவில்லையே என்று நடந்து கொண்டே சென்று மயக்கத்தில் விழுந்தான். அங்கு ஒளியோடு கடவுள் தோன்றி, பக்தா உனக்கு என்ன வேண்டும்? ஏதாவது மூன்று வரம் தருகிறேன். யோசித்து கேள் என்றார். பிச்சைக்காரன், யோசித்தபோது,  நாம் பிறவியில் இருந்து பிச்சை எடுத்தோம். பிச்சை எடுத்து பிழைத்து கொள்ளலாம். ஆனால் அந்த மூன்று நபர்கள் தன்னை நம்பி கேட்ட கோரிக்கையையே கேட்போம் என்று நன்கு யோசித்து, கடவுளிடம் அந்த மூவர் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டான். கடவுளும் அந்த மூன்று வரம் தந்து மறைந்தார்.

 திரும்பி வந்து ஆமையை சந்தித்தான். கடவுளை பார்த்தாயா நான் பறக்க என்ன சொன்னார் என்று ஆமை கேட்டது. நீ உன் மேல் உள்ள ஓடை எடுத்து போடு  ரெக்கைகள் வரும் என்றான். ஆமை ஓட்டை எடுத்ததும் ரெக்கைகள் வந்தது. அந்த ஓடு நிறைய நவரத்தினங்கள் ஜொலித்தது. அதைப் பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு ஆமை பறந்தது. வழியில் மந்திரவாதியை சந்தித்து மந்திரக்கோலை போட்டு விட்டால் உங்களுக்கு முக்தி என்றான்.உடனே மந்திரவாதி, தம்பி இது சக்திவாய்ந்த மந்திரக்கோல்.இதை நல்லவைகளுக்கு பயன்படுத்து என்று அவனிடமே கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்.   

நவரத்தினங்களுடன், மந்திரக்கோலுடன் செல்வந்தர் வீட்டிற்கு வந்தான்.செல்வந்தர் தன் மகள் பேச்சு பற்றி கேட்கும் போதே மாடியில் இருந்து அவர் மகள், அப்பா அன்று வந்து தங்கி சென்றவர் இவர்தானே  என்று பேசினாள். செல்வந்தனுக்கு ஒரே மகிழ்ச்சி. தன் மகளை அவனுக்கே திருமணம் செய்து வைத்து எல்லா சொத்துக்களையும் அவனுக்கு கொடுத்து விட்டார்.அந்த பிச்சைக்காரன் செல்வந்தன் ஆனதும், தன்னுடன் பிச்சை எடுத்த அனைவரையும் அழைத்து தன் பண்ணையிலே வேலை போட்டுக். கொடுத்து தங்கவும் வீடு கட்டி கொடுத்து ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கினான். 

இதில் நாம் அறிவது, நமக்கென எதுவும் சுய நலத்துடன் வேண்டக்கூடாது, நம்மால் முடிந்த உதவி பிறருக்கு செய்து, பிறருக்காக வேண்டினால், நம் துன்பம் தானே விலகும் என்பதே.. வீட்டின் வெளியில் சுவற்றில் சுற்றும் எறும்புக்குக்கூட மூலையில் ஒரு பிடி அரிசி மாவை வைத்தால், நம் வீட்டு அரிசி பானை நிரம்பியே இருக்கும்.நாம் உண்ணும் முன் ஒரு பிடி சாதம் வீட்டின் புழக்கடையில் வைத்தால்  அதை,காகம், குருவிகள், அணில்கள் சாப்பிட்டு நம்மை வாழ்த்தும். நம் வீட்டில் வறுமை இருக்காது. 

பிறர் பசி ஆற நம் பிணிகள் அழியும். இன்னல் புரிவோர், நம்மை எதிரியாய் நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனம் திருந்தவேண்டும், நல்வாழ்வு பெறவேண்டும் என்று கருணையோடு வாழ்த்துவோம்.

Top