logo
இழப்பீடு ஏற்பட்டாலும் அடுத்த சாகுபடிக்கு தயங்காத விவசாயிகள் வணக்கத்துக்குரியவர்கள்: ஆர் ராஜ்குமார் பேச்சு

இழப்பீடு ஏற்பட்டாலும் அடுத்த சாகுபடிக்கு தயங்காத விவசாயிகள் வணக்கத்துக்குரியவர்கள்: ஆர் ராஜ்குமார் பேச்சு

11/Nov/2020 05:36:39

புதுக்கோட்டை:  விவசாயத்தில் இழப்பீடு ஏற்பட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல் அடுத்த சாகுபடிக்கு தயங்காமல் களமிறங்கும் விவசாயிகள் வணக்கத்துக்குறியவர்களே என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர்.ராஜ்குமார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ராபி பருவத்துக்கான பூச்சி மற்றும் நோய்த்தடுப்பு கருத்தரங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் துரை.மலர்விழி தலைமையில் ஆலங்குடி அருகே அரையப்பட்டியில்  நடைபெற்றது.

கருத்தரங்கில் கலந்துகொண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர்.ராஜ்குமார்  பேசும்போது, கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் பனியாற்றியவர்கள் இருவர். ஒருவர் மருத்துவத்துறையினர். உயிரைப் பபனையம் வைத்து இவர்கள் ஆற்றிய பணியை உலகமே பாராட்டுகிறது.

இன்னொருவர் விவசாயிகள்.  மருத்துவர்களைப் போல மதித்து போற்றத் தக்கவர்கள் விவசாயிகள்.  கொரோனா காலத்தில் அனைத்து சிரமங்களையும் எதிர்கொண்டு கடந்த காலத்தைவிட அதிக அளவில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர்.

எல்லா காலங்களிலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. அவர்கள்  தங்களது உடலுலைப்பையோ, தண்ணீரையோ உற்பத்தி செலவில் கணக்கிடுவதில்லை. அப்படியான சுழ்நிலையிலும் விவசாயிகளுக்கு பெரும்பாலான நேரங்களில் நட்டமே ஏற்படுகிறது. அப்படி இழப்பீடு ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த சாகுபடிக்கு தயாராகும் தன்னலமற்ற உழைப்பாளிகள்தான் விவசாயிகள்.

விவசாயத்தில் பெரும்பகுதியான செலவினம் இடுபொருட்களிலேயே ஏற்படுகிறது. முறையான மண்பரிசோதனை செய்து சாகுபடி செய்தால் உரச்செலவில் பெருமளவு குறைக்க முடியும். பயிர்களில் நோய் தாக்கிய பிறகு அதை தடுப்பது கடினம். மருந்து செலவும் கூடுதலாகும். எனவே, நோய்கள் தாக்குவதற்கு முன்பாகவே அதை தடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆலோசனைகளை எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

விவசாயிகள் கொண்டுவந்த பயிர்களை ஆய்வுசெய்து பயிர் மருத்துவர் பி.செந்தில்குமார் விளக்கவுரையாற்றினார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன்,  வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைப்பெருந்தலைவர் எஸ்.ஆர்.வடிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் ரஞ்சிதம் அ.க.முத்து, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் விஜயா சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக கள ஒருங்கிணைப்பாளர் டி.விமலா வரவேற்றார். ஆர்.சந்திரசேகர் நன்றி கூறினர். கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். 


Top