logo
தனிநபர், சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாக ரூ.40லட்சம் மோசடி : தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் கைது

தனிநபர், சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாக ரூ.40லட்சம் மோசடி : தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் கைது

28/Oct/2020 11:48:47

ஈரோடு மாவட்டம், பவானி, காலிங்கராயன் பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை கடந்த மாதம் துவங்கப்பட்டது. தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி மற்றும் பொறியியல் படித்த இளைஞர்களையும், பெண்களையும் 25-க்கும் மேற்பட்டோரை பணிக்கு வைத்து, அவர்கள் மூலமும் மற்றும் துண்டு பிரசுரம் மூலமும் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனி நபர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1லட்சம் முதல் ரூ.3லட்சம் வரை 1.5சதவீத வட்டியில் கடன் தருவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். 

இதனை நம்பி வந்த மக்களிடமும், சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்களிடமும், கடன் பெற ஆவண(டாக்குமென்ட்) கட்டணம் ரூ.1,250 ஆகும் என்றும், ரூ.1லட்சம் கடன் பெற்றால் ரூ.5ஆயிரம், ரூ.2லட்சம் கடன் பெற்றால் ரூ.10ஆயிரம் கமிஷனாக கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். இதன்பேரில், தனி நபர் கடன் பெற ரூ.1,250ம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 10பேர், 15பேர் என குழுவாக சேர்ந்து தனித்தனியாக தலா ரூ.30ஆயிரம் வரை டாக்குமென்ட் கட்டணமாக ரூ.40லட்சம் பெற்றுக்கொண்டு, கடன் தராமல் அந்நிறுவனத்தினர், தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அந்நிறுவன ஊழியர்கள் என தனித்தனியாக கடந்த 20ம் தேதி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் 77 புகார் மனு அளித்தனர். இந்த புகாரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நிதி  நிறுவனத்தின்  உரிமையாளர் உட்பட 2பேரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் அறிந்ததும், அந்நிறுவனத்தில் முன் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு எஸ்.பி.அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

இந்நிலையில், தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுரேஷ்குமார் (38), வெங்கடேஷ் என்கிற வேதகிரி (41) ஆகியோரை  போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து  ஈரோடு, எஸ்பி தங்கதுரை கூறுகையில்,  தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுரேஷ்குமார், வெங்கடேஷ் என்கிற வேதகிரி ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். மேலும் ,இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு விரைவில் அவர்களது பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


Top