logo
திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு

27/Oct/2020 10:07:57

திருச்சி:  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த வருடம் அதிகாலையில் 2 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையை நடத்தியது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் என்ற தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

திருவாரூரை சேர்ந்தவர் முருகன் (44). கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி. இவர், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கைவரிசை காட்டி உள்ளார். முருகன் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு கொள்ளை கும்பலும் தனித்தனி முறைகளை கையாளுவார்கள். ஆனால் முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் ஒருமுறை திட்டமிட்டு களத்தில் இறங்கி விட்டால் வெற்றிகரமாக கொள்ளையடித்து விட்டு தான் திரும்புவார்கள்.

கடந்த 2008-ம் ஆண்டு முருகன் தனக்கென கொள்ளை கும்பலை உருவாக்கி கொண்டு, முதன்முதலில் பெங்களூருவில் கைவரிசை காட்ட தொடங்கினார். அப்போது 2011-ஆம் ஆண்டு பெங்களூரு போலீசார் ஒரு கொள்ளை வழக்கில் முருகனை கைது செய்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நிலையில்,திருச்சியிலுள்ள லலிதா ஜூவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூ.12.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

போலீஸாரால் கைது செய்யப்பட்டு  பெங்களூருவில் விசாரணைக்கைதியாக இருந்த முருகன் உடல் நலக்குறைவு காரணமாக  உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Top