logo
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தீர்மானம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தீர்மானம்

25/Oct/2020 05:40:48

ஈரோடு:  அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (AIYF)  ஈரோடு வட்டார சிறப்புப் பேரவைக் கூட்டம் ஈரோடு, மாணிக்கம் பாளையம், பாரதி அரங்கில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தில் முன்னாள்  மாவட்டத் தலைவர் எஸ்.டி. பிரபாகரன்  தலைமையில் நடைபெற்றது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ர் த.ஸ்டாலின் குணசேகரன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் க.பாரதி, முன்னாள் மாநில துணைத் தலைவர் தோழர் ப.மா.பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தோழர் வி.செல்வராஜன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை,   பின்தங்கிய அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்வி பயின்று சாதனை படைத்து வருகிறார்கள். 

ஆனால், உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் காவி சிந்தனையை புகுத்துவதற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் சாதாரண ஏழை, பின்தங்கிய, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மாணவர்கள் உயர் பொறியியல் கல்வியை  பெற முடியாத நிலைக்கும், தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை முற்றிலுமாக துடைத்தெறியவும் நினைக்கும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். 

2) தமிழகத்தில் இந்தித்திணிப்பை ஊக்குவிக்க மும்மொழி கல்வி என்ற பெயரில் புதிய கல்வி கொள்கையானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிப்பதோடு,மீண்டும் நவீன குலக்கல்வி முறையை கொண்டு வரும் நோக்கமாகும்.  கல்வியை வியாபாராமாக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசை கூட்டம் வலியுறுத்துகிறது.

3) மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்வி பயில இந்த வருடமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். 

4) ஈரோடு வட்டாரத்தில் உள்ள இளைஞர்களுக்கு  புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த வேளாண் தொழில் சார்ந்த தொழில்களை அரசே ஏற்படுத்தி வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும். 

5) கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை வருடத்திற்கு 200 நாட்களாக அதிகரிப்பதோடு, தினக்கூலியை ரூ 400/- ஆக உயர்த்த வேண்டும் என்றும், நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி,  பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தி அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஈரோடு வட்டாரச் செயலாளர் டி.சோமசுந்தரம் நன்றி கூறினார்


Top