logo
ஊடகத்துறையினர் அனைவருக்கும் கொரோனா சோதனை அவசியம்: மதுக்கூர் ராமலிங்கம்.

ஊடகத்துறையினர் அனைவருக்கும் கொரோனா சோதனை அவசியம்: மதுக்கூர் ராமலிங்கம்.

22/Apr/2020 08:16:04

ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும்

கொரோனா தொற்று சோதனை உடனடியாக நடத்த வேண்டுமென

தீக்கதிர் நாளேட்டின் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தெரிவித்துள்ளார்


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


கொரோனா நோய்த் தொற்றை எதிர்த்து போராடி வருகிற மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.  அவர்கள் ஆற்றிவருகிற மகத்தான பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதேபோல இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் அயர்வற்ற பணியாற்றி வருகின்றனர். தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு செல்வதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இவர்களும் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றனர்.


இந்த நிலையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூரிலும் ஒரு பத்திரிகையாளர் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் சுமார் 30 பத்திரிகையாளர்களுக்கு தொற்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.மும்பையில் 53 பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லை என்பது நிலைமையை மேலும் விபரீதமாக்குகிறது.


சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதையறிந்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இதேபோல தமிழகம் முழுவதும் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறிப்பாக களத்தில் சென்று பணியாற்றும் அனைத்து செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் உடனடியாக நோய்த்தொற்று குறித்த பரிசோதனை செய்யப்படவேண்டியது அவசியமாகும்.


அரசும் இயன்றவரை நேரடியான செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்ப்பதோடு அனைத்துத் தரப்பினருக்கும் இதை அறிவுறுத்த வேண்டும். தேவையான செய்திகளை இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தெரிவிக்க வேண்டும். நெருக்கடியான இந்தக் காலத்தில் பல்வேறு ஊடகங்களும் செய்தித்தாள்களும் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து வெளியே அனுப்புவது என்பது கொடூரமான ஒன்றாகும். ஊதியத்தை பிடிப்பது, குறைப்பது போன்ற நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்களில் நடந்துவருகிறது. இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ஊதியத்தை நிறுத்துவது, வேலை நீக்கம் செய்வது போன்றவற்றை எந்தத்துறையிலும் செய்யக்கூடாது என்பதை மத்திய-மாநில அரசுகள் வெறும் அறிவுறுத்தலாக மட்டுமின்றி உத்தரவாகப் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Top