logo
ஓவியர் ராஜா நினைவாக ஓவியாலயம் அமைக்க புதுக்கோட்டை ஓவியர் நலச்சங்கம் கோரிக்கை

ஓவியர் ராஜா நினைவாக ஓவியாலயம் அமைக்க புதுக்கோட்டை ஓவியர் நலச்சங்கம் கோரிக்கை

23/Oct/2020 09:43:42

புதுக்கோட்டைக்கு புகழ்சேர்த்த ஓவியர் ராஜாவுக்கு நினைவுமண்டபம் அமைத்து  ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சிப் பள்ளியை இலவசமாக நடத்த வேண்டும் என்று ஓவியர் நலச்சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுக்கோட்டை சந்தைப் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  வியாழக்கிழமை(22.10.2020) நடந்த , ஓவியர் ராஜாவின் 13-ஆம் ஆண்டு நினைவாஞ்சலிக் கூட்டத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஓவியர் நலச்சங்கத் தலைவர்  வெங்கடேசன் தலைமை வகித்தார். ஓவியர் ராஜாவின் துணைவியார் வசந்தா ராஜா, அவரது மகன் டாக்டர் சுரேஷ் குமார், தலைமை ஆசிரியர்  விஜயமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசும் சான்றும் வழங்கி கவிஞர் நா.முத்துநிலவன்  பேசியதாவது:

மாணவர்கள், பள்ளிப் பாடங்களில் மட்டுமல்ல, ஓவியம், இசை, விளையாட்டு, பாடல், எனத் தனக்கு ஆர்வமான கலைகளையும் கற்றுக் கொள்வது அவசியம். அதுவும் இந்தக் கொரோனா காலத்தில், தொலைக்காட்சி தொடர்களிலும், செல்லிடப்பேசி விளையாட்டுகளிலும் நேரத்தை வீணாக்காமல் வீட்டிலிருந்தபடியே இவை போலும் கலைகளையும் கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் மதிப்பெண்களைத் தாண்டிய வேலை வாய்ப்புகள் கிடைக்க அதுவே பேருதவியாக இருக்கும்.

ஓவியர் ராஜா, 50 ஆண்டுக்கு முன்பே நல்ல பொருளாதார வசதியுடன் இருந்தார். அவரது வீதியில் அவர்வீட்டில் மட்டுமே அப்போது தொலைபேசி இருந்தது. அந்த வசதியை அவர் பெறக் காரணமாக இருந்த ஓவியக் கலைதான். நமது பள்ளி மாணவர்களின் நோட்டு அட்டைகளில் ஒளிவீசி என்போன்ற லட்சக் கணக்கானவர்களை ஓவியத்தின்பால் ஈர்த்தது. அவரிடம் ஓவியம் பயின்ற சுமார் 30 பேர் இப்போது அதையே முழுநேரத் தொழிலாகச் செய்கின்றனர். அந்த நன்றிக்காகத்தான் இந்த விழா நடக்கிறது. இலவசமாக நானும் அவரிடம் பயிற்சி பெற்றேன். எனக்கு வேலை கிடைக்கும் வரை  அதுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றியது.

ஐயாயிரம் ஆண்டுக்கு முந்திய பாறை ஓவியங்களைத் திருமயத்திலும், ஆயிரம் ஆண்டுக்கு முந்திய வண்ண ஓவியங்களைச் சித்தன்ன வாசலிலும் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓவியப் புகழை உலகளவில் கொண்டு சேர்த்த ராஜா அவர்களுக்கு ஓவியர் ராஜாவுக்கு, அவரது புகழைப் பரப்ப மட்டுமின்றி ஓவியத்தில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி தருவதற்காகவும் அவரது நினைவாகவே ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டி தென்னக ஒவியர்கள் முன்னேற்ற சங்கமும், புதுக்கோட்டை மாவட்ட ஓவியர் முன்னேற்ற நலச்சங்கமும் இணைந்து தீர்மானித்திருக்கின்றன. இதனை  தமிழக அரசு நிறைவேற்றித்தர அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்க்கானராஜா நினைவு ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்கள் விவரம் வருமாறு:

3,4,5 வகுப்புக்கான முதல் மூன்று பரிசுகள் பெற்ற மாணவர், பள்ளி விவரம்-  (1) ஆயிஷா தஸ்நீம், நகராட்சிப் பள்ளி, ராஜகோபாலபுரம், (2) நாகராஜன், கே.வி. பள்ளி பெருங்குடி, (3) அல்ஷிதயா, நமணசமுத்திரம்.

 6,7,8 வகுப்பு மாணவருக்கான மூன்று பரிசுகள் பெற்ற மாணவர், பள்ளி விவரம்- (1) யாழினி, இராம.செ.மேனிலைப்பள்ளி, நச்சாந்துப்பட்டி, (2) சமய தர்ஷினி, சிவகமலம் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, அரிமளம், (3) அரிணி, எம்சிடிஆர்எம் மேனிலைப்பள்ளி, குழிபிறை.

 9,10 வகுப்புக்கான முதல் மூன்று பரிசுகள் பெற்ற மாணவர், பள்ளி விவரம்- (1)அரிஸ் பாலாஜி, வைரம்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, புதுக்கோட்டை,  (2) ஸ்ரீமலைவாசன், எம்சிடிஆர்எம் மேனிலைப்பள்ளி, குழிபிறை, (3)நாககௌரி, இராமநாதன் செட்டியார் மேனிலைப்பள்ளி, நச்சாந்துப்பட்டி,

11,12ஆம் வகுப்புக்கான பரிசுகளைப் பெற்ற மாணவர், பள்ளி விவரம்- (1)விதுலா, வைரம்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, புதுக்கோட்டை (2)பாலா, தூய மரியன்னை ஆண்கள் மேனிலைப்பள்ளி, புதுக்கோட்டை (3)வைரவ பாண்டியன், இராமநாதன் செட்டியார் மேனிலைப்பள்ளி, நச்சாந்துப்பட்டி,

நிகழ்ச்சியில், ஓவியர் ராஜா பற்றிய குறிப்பேட்டை தலைமை ஆசிரியர் விஜய மாணிக்கம் வெளியிட்டார். ஓவியர் ராஜா வரைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூல ஓவியங்களும், போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் வரைந்த 385-ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக,தென்னக ஓவியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொருளர் சித்ரகலா ரவி வரவேற்றார்மாவட்டப் பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை, புதுக்கோட்டை மாவட்ட ஓவியர்களும், ஓவியர் ராஜாவின் மாணவர்களுமான அறிவழகன், புவனேஸ்வரி, பாலமுருகன், பாண்டியன், பொன்.தனபாலன், தனபால கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்

மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்பட சுமார் 200 பேர் கொரோனா கால அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி  முகக் கவசத்துடனும், சமூகஇடைவெளியுடன் கலந்கொண்டது குறிப்பிடத் தக்கது.

Top