logo
7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்.-அமைச்சர் விஜயபாஸ்கர்

7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்.-அமைச்சர் விஜயபாஸ்கர்

17/Oct/2020 12:54:57

புதுக்கோட்டையில் அதிமுகவின்  49-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று(17.10.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமிழகத்தில் வைரஸின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைக்கவில்லை. தினமும் 90 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

ஐசிஎம்ஆர் பரிந்துரையின்படி தான் நாம் என்டோ மைசர் மருந்தை பரிசோதனை செய்தோம் தமிழக நோயாளிகளுக்கு அது நல்ல பயன் அளித்தது ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகளை நாம் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

ஆனால், ஐசிஎம்ஆர் நேற்று அறிவித்துள்ளது. இந்த மருந்தினால் எந்தவிதமான பயனும் இல்லை என்று அவர்கள் கூறுவது ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகளை கொண்டுவராமல் நோய் முற்றிய பிறகு நோயாளிகளுக்கு அந்த மருந்தை அளித்தால் பயன் தரவில்லை என்று கூறியுள்ளது. இது, ஐ.சி.எம்.ஆர்  கருத்து.  ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த மருந்து நல்ல பயனளித்து வருகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது.ஆளுநரின் முடிவுக்குப் பிறகு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தமிழகத்தில் நடைபெறும்.

மருத்துவப்படிப்புக்கான கவுன்சிலிங் நடத்துவதற்கு அவசரம் இல்லை. தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம். ஆளுநர் முடிவு வந்த பிறகு மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பமே அளிக்கப்படும் இது நல்ல விஷயம். ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு பெற்றே தீரும்.ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றுள்ளோம். இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்பதை நம்பிக்கையில் உள்ளோம். அரசு சார்பாக நல்ல முறையில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு இந்த ஆண்டு அமல்படுத்துவோம் எந்த காலத்திலும் இட ஒதுக்கீட்டு முறையில் அரசு பின்வாங்காது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இரண்டாவது அலை  வருமா என்று கேட்டதற்கு  பதிலளித்த அமைச்சர் தமிழகம் சுகாதார கட்டமைப்பில் வலுவாக உள்ளது. தமிழக அரசு எந்த நிலையும் சமாளிக்க தயாராக உள்ளது. ஆனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் இரண்டாவது அலை மட்டுமல்ல  மூன்றாவது அலையும் வருவதற்கு வாய்ப்பு கிடையாது என்றார்.

பேட்டியின் போது, அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ ரெத்தினசபாபதி நகர செயலாளர் பாஸ்கர் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட்டு உள்பட பலர் உடனிருந்தனர்.

Top