logo
புதுக்கோட்டையில் கேடயம்( SHIELD ) செயல்திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டையில் கேடயம்( SHIELD ) செயல்திட்டம் தொடக்கம்

14/Oct/2020 10:34:35

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து கேடயம் ( SHIELD ) என்ற செயல்திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அப்துல் மாலிக்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி இன்று(14.10.2020) தொடங்கி வைத்தனர்.

 திருச்சி சரகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கடந்த செப்டம்பர் 21 -ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் தொடங்கிய செயல்திட்டம் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், திருச்சி சரக பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச் செயல்களில் தரவுகளை சேகரித்து அதில் மிக தீவிரத்தன்மை கொண்ட 6 குற்றங்களை கண்டறிந்தது மட்டுமல்லாமல் அதிகக் குற்றங்கள் நடைபெறும் 25 இடங்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்படும்.

 மேலும், இக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மேலும் எந்தெந்த பகுதியில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என்று கண்காணித்து அங்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகமாக ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தை முக்கிய நோக்கமாக உள்ளது.

 நிகழ்ச்சியில்நீதிபதி அப்துல் மாலிக் பேசுகையில்நீதித்துறையை பொறுத்தவரையில் இத்திட்டத்திற்கு நீதிதுறை சார்பில் இலவச சட்ட பணிகள் ஆலோசனை மையம் செயல்படுகின்றது. இந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டு குற்றங்களை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்களை தடுக்க பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் புலன் விசாரணை முறையாகச் செய்யாததால் அதிக தண்டனை பெற்றுத்தர முடியாத சூழ்நிலை இருக்கிறது. புலன் விசாரணையை தீவிரப்படுத்தி சிறப்பாக செயல்பட்டால் காவல் துறைக்கும் நீதித்துறைக்கும் பொது மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்று மாவட்ட கூடுதல் நீதிபதி அப்துல் மாலிக் பேசினார்.

 தொடர்ந்து, நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி பேசுகையில், குற்றங்களை கண்டறிவதில் உலகத்திலேயே முதன்மையான காவல்துறை தமிழக காவல்துறை என்றும் தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது .

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும் 8 லட்சம் பெண்களும் இருக்கின்றனர் . அவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு அவசியம் என்று குறிப்பிட்டார்.

 

Top