logo
இன்றைய சிந்தனை ( 14.10.2020)  நம்மை உற்சாகப்படுத்துவது யார் ?

இன்றைய சிந்தனை ( 14.10.2020) நம்மை உற்சாகப்படுத்துவது யார் ?

14/Oct/2020 02:12:58

பல நேரங்களில் நம் செயல்பாடுகள்  நம் அருகில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் நமக்கும் ஒட்டிக் கொள்கிறது...

எனவே, வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் நாம் ஆலோசிக்க வேண்டும். நமது அருகில் இருப்பது யார் உற்சாகமானவரா  சுறுசுறுப்பானவரா நம்பிக்கையானவரா  விரக்தி எண்ணம் உள்ளவரா என்று. இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக நிறுவனத்தை துவக்கி, கொடிகட்டிப் பறந்தவர்கள்  தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே, நமக்கும், நம் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.இலக்கு, குறிக்கோள் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் கொண்ட குறிக்கோளை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக உள்ளவர்களைத் தேடிப் பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த மகிழுந்து திடீரென்று நின்றது.. ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ர்ந்து இருந்தவர் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்.ஓட்டுனர் அவரை தட்டி எழுப்பி, அய்யா, கொஞ்சம் பின் சென்று உறங்குங்கள். நீங்கள் உறங்குவதைக் கண்டால் எனக்கும் உறக்கம் வருகிறது”.என்றார்...

உறங்கி கொண்டிருந்தவர் எழுந்து பின்னால் சென்று அமர்ந்து கொண்டு உறக்கத்தை தொடர ஆரம்பித்தார். நம் அருகில் உள்ளவர்களால் நாம் எப்படி உற்சாகம் பெறுகின்றமோ, அதைப் போலவே நம்மை பார்த்து மற்றவர்களும்  எழுச்சி பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும்.நம் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் நம் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

ஆம் நண்பர்களே, உன் நண்பன் யாரென்று சொல், உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் இப்படி ஒரு பழமொழி உண்டு. நம் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம். நமது இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள்.

நமது குறிக்கோளை அடைய பாடுபடும் போது நம்மை உற்சாகப்படுத்தி நம்முடன் கூட வருபவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு உந்துதலாகஉற்சாகப்படுத்துவராக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Top