logo
ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு:  பழைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது

ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு: பழைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது

02/Sep/2021 12:41:00

ஈரோடு, செப்: ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக சத்தி ரோடு பகுதியில் உள்ள இரு சக்கர, நான்கு சக்கர ஸ்டாண்டுகள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய ஆர்.டி.ஓ. அலுவலகமாக செயல்பட்ட கட்டிடம், அந்த பகுதியில் உள்ள டீ, பழக்கடைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாநகராட்சி சார்பில் ஏற்கனவே இந்த கடைகளை காலி செய்ய வலியுறுத்தி இருந்தனர். 

 இதையடுத்து நேற்று கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடையில் உள்ள பொருட்களை அகற்றினர். கடையில் இருக்கும் லேபிள்கள், பலகைகள், ஸ்டாண்ட், ஏ.சி, மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை வேன்களில் ஏற்றி சென்றனர்.  இதை தொடர்ந்து இன்று கடைகளில் உள்ள ஷட்டர்கள் அகற்றப்பட்டனர். மாநகராட்சி சார்பில் ஜேசிபி பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சக்தி ரோடு பகுதியில் உள்ள தரைத்தளம்  இடிக்கும் பணி இன்று தொடங்கியது. 

சத்தி ரோடு பகுதியில் உள்ள வடக்கு போக்குவரத்து காவல் நிலையம் முன்பு உள்ள தரைத் தளம் இன்று இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கும் பணி தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Top