logo
மொடக்குறிச்சி அருகே மயானத்தை அகற்ற முயற்சி: கிராமக்கள் முற்றுகைப் போராட்டம்

மொடக்குறிச்சி அருகே மயானத்தை அகற்ற முயற்சி: கிராமக்கள் முற்றுகைப் போராட்டம்

02/Sep/2021 12:21:13

ஈரோடு: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட 46 புதூர் ஊராட்சியில் ஆனைக்கல்பாளையம் உள்ளது. ஆனைக்கல்பாலத்தின் வழியாக ஈரோடு புறவழிச்சாலையான ரிங் ரோடு செல்கிறது. இந்நிலையில் ஆனைக்கல்பாளையம் பகுதியில் 3 சமுதாயங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிங் ரோடு அருகில் சுடுகாடு உள்ளது. இதனை கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுடுகாட்டுக்கு பின்புறம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் சுடுகாட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன்படுத்தி சாலையோர பூங்கா அமைப்பதற்காக வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுடுகாட்டை அகற்றக்கூடாது, இந்த சுடுகாட்டை நாங்கள் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறோம் எனவே சுடுகாட்டை அகற்றக்கூடாது என வலியுறுத்தி பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் மற்றும் 46 புதூர் ஊராட்சி தலைவர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணியை நிறுத்திவிட்டு சென்று விட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Top