logo
ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் அருகே துணிகரம் 40 புறாக்களை திருடிய 3 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது

ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் அருகே துணிகரம் 40 புறாக்களை திருடிய 3 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது

30/Aug/2021 12:44:34

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம், பங்களாபுதூர் அருகே துணிகரம் 40 புறாக்களை திருடிய 3 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது.

ஈரோடு மாவட்டம், கே. என். பாளையம் அடுத்த தாசிரிபாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் என்கிற ராமசாமி ( 40). அவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு முகேஷ், பிரவீன் என இரு மகன்கள் உள்ளனர். மனோகரன் ஆலத்து கோம்பை பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார்.  முதலில் தாசிரி பாளையத்தில் குடியிருந்து வந்தனர். பின்னர் நரசாபுரம் பகுதியில் குடும்பத்துடன் மனோகரன் குடியிருந்து வந்தார். பழைய வீட்டு மனோகரன் மகன்கள்  70 புறாக்களை வளர்த்து வந்தனர். தினமும் அவரது மகன்கள் புறாக்களுக்கு தீனி போட்டு வளர்த்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் புறாக்களுக்கு உணவு கொடுப்பதற்கு மனோகரன் சென்றார். அப்போது வீட்டு மாடியில் புறாக்கள் இருக்கும் இடத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது இரண்டு நபர்கள்  வீட்டு மொட்டை மாடியில் அடைத்து வைத்திருந்த புறாக்களை பெரிய வெள்ளை நிற பையில் போட்டுக் கொண்டிருந்தனர். சிறிது தூரம் தொலைவில் மற்றொருவர் நின்று கொண்டிருந்தார். மர்ம நபர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோரன் சப்தம் போட்டார். மனோகரனை  பார்த்ததும் மர்மநபர்கள் 2 பேரும்  40 புறாக்கள் வரை பையில் போட்டுக் கொண்டு தப்பி ஓடினர்.

 மனோகரன் அவர்களை துரத்தினார். ஆனால் அவர்கள் 3 பேரும் சிறிது தொலைவில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றனர்.  மூன்று பேரில் ஒருவரது  மோட்டார் சைக்கிள் எடுக்க முடியவில்லை. மற்ற இருவரும் மோட்டார் சைக்கிளுடன் தப்பி சென்று விட்டனர். பின்னர் அந்த ஒரு நபரை மனோகரன் மற்றும் அவரது மகன்கள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவன் அதே பகுதியைச் சேர்ந்த கருணமூர்த்தி (24) என்பதும் மற்ற இருவர்கள் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (38) சக்திவேல்(22) என்பதும் தெரியவந்தது. 

சக்திவேல் வீட்டில்தான் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாக  கருணாமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து மனோகர் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பொன்னுச்சாமியும், சக்திவேலும் புறாக்களை வீட்டில் வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனோகர் மற்றும் அவரது மகன்கள் மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து ,பங்களாபுதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புறாக்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 40 புறாக்கள் மீட்கப்பட்டது. மேலும் அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களையும்  போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Top