logo
 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சித் தலைவர்களுக்கு  அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எஸ். ரகுபதி பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சித் தலைவர்களுக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எஸ். ரகுபதி பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

23/Aug/2021 09:44:03

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சித் தலைவர்களுக்கு  அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எஸ். ரகுபதி  ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், ராங்கியத்தில் பொதுமக்களுக்கு 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட வகையில் சிறப்பாக பணியாற்றிய 56 கிராம ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்  கவிதா ராமு தலைமையில் (22.08.2021) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய பணியில் சிறப்பாக பணியாற்றிய 56 கிராம ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்எஸ்.ரகுபதி,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 23,000 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி தமிழகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. மேலும் மாவட்டத்தில் சுமார்  5.30 லட்சம் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு 40 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாகவும் திகழ்கிறது. 

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 75 சதவீதம் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், 56 ஊராட்சிகளில் முழுவதுமாக கோவிட் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும்வாழ்த்துகள்.திருவாரூர் மாவட்டம், காட்டூர் ஊராட்சி தமிழகத்தில் முதன்முதலாக 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திய ஊராட்சியாகும். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திய நகராட்சி. இதேபோன்று பழனி, வேளாங்கண்ணி, நாகூர், இராமேஸ்வரம்  போன்ற பல்வேறு சுற்றுலாத்தலங்களில் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் மொத்தம் 120 -க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திய ஊராட்சியாக திகழ்கிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டும் 56 ஊராட்சிகள் உள்ளன. 

தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், இதுவரை தமிழகம் முழுவதும் 1,75,055 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.  வரும் டிசம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தின்கீழ், ஒரு கோடி நபர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார். கோவிட் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

பின்னர் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி  பேசியதாவது;

 தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் செப்டம்பர் முதல் நாள் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு கைக்கழுவுதல், சமூகஇடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடிக்க  வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். 

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதால்தான்  கொரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வருவதை தடுத்திட அனைவரும் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவருக்கும் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி. 

இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் மேகலாமுத்து (அரிமளம்), மாலாராஜேந்திரதுரை (கறம்பக்குடி), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி) உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுசுகாதாரத் துணை இயக்குநர்கள்  அர்ஜுன்குமார்,கலைவாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 


Top