logo
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.80 லட்சத்தில் துணை சுகாதார மைய புதிய கட்டிடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.80 லட்சத்தில் துணை சுகாதார மைய புதிய கட்டிடங்கள் திறப்பு

21/Aug/2021 11:35:12

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார மைய கட்டிடங்களின் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தலைமையில்(21.08.2021) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிகளில் சுந்தம்பட்டி, வேலாடிப்பட்டி, வெள்ளாளவிடுதி, கல்லாக்கோட்டை ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார மைய கட்டிடங்களை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  திறந்து வைத்து பேசியதாவது;

பொதுமக்கள் வாழும் கிராமங்களில் துணை சுகாதார மையம் மிகவும் அவசியமானதாகும். அந்தவகையில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தம்பட்டி, வேலாடிப்பட்டி, வெள்ளாளவிடுதி, கல்லாக்கோட்டை ஆகிய கிராமங்களில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்கீழ் தலா ரூ.20 லட்சம் என ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார மையக் கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த துணை சுகாதார மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக பிரசவங்கள் நடைபெறுவதற்கு மிகவும் முக்கிய காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் திகழ்கிறது. 

ஏனெனில் இங்கு பணிபுரியும் செவிலியர்கள், கர்ப்பிணித் தாய்மார்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர். இதனை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

முன்னாள் முதல்வர் கலைஞர்  பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் வருமுன் காப்போம் திட்டத்தை செயல்படுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தையும் செயல்படுத்தி, ஏழை, எளியோருக்கு உயர் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்தார்கள். 

அதேபோன்று தற்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம்  என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ்,  தொற்றாநோய் உள்ளவர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்படுவதுடன், பிசியோதெரபி சிகிச்சைகள் அவர்களது இல்லங்களிலேயே வழங்கப்படுகிறது. சிறப்பான இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின்  சிறப்பான திட்டங்களைப் பாராட்டி இந்தியாவிலேயே உள்ள , முதல்வர்களில் சிறந்த முதல்வராக செயல்படுவதாக இந்தியாடுடே மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி. 

இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.ரெத்தினவேல், பொதுசுகாதாரத் துணை இயக்குநர்  ப.கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.நலதேவன், என்.காமராஜ், வட்டாட்சியர் புவியரசன், உதவிப் பொறியாளர் பார்த்திபன், கந்தர்வக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர்கள் எம்.பரமசிவம், பவுன்ராஜ், புவனேஷ்வரி ரெங்கராஜ், இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 


Top