logo
புதுக்கோட்டையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

20/Aug/2021 09:59:02

புதுக்கோட்டை, ஆக:புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்(19.08.2021) நடைபெற்றது. 

இக்கருத்தரங்கை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:தேசிய அளவில் ஒன்றிய அரசின் நிதியுதவியின்கீழ், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சாலைவசதியற்ற கிராமங்களுக்கும் சாலைவசதி ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களுக்கும் சாலைவசதி ஏற்படுத்த வேண்டுமென்பதே ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் ஏற்கனவே பகுதி- I  மற்றும் பகுதி- I I ஆகிய திட்டப் பணிகள் முடிவுற்றுள்ளதுடன், தற்பொழுது இத்திட்டத்தின் பகுதி-I I I செயல்படுத்தப்பட உள்ளது. 

மேலும், இத்திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த ஓர் இணையதள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு OMMAS (ONLINE MANAGEMENT, MONITORING AND ACCOUNTING SYSTEM)  புவியியல் தகவல் முறையில்  GIS (GEOGRAPHIC INFORMATION SYSTEM) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதிய சாலை ஏற்படுத்தும் பொழுதும் அதற்கான செலவினங்களை கண்காணிக்கும் வகையில் இணையதள மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பில்  OMMAS  ஒரு தனி தொகுதி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தை கிராமங்களில் சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இக்கருத்தரங்கினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்தார். 

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி இத்திட்டப் பணிகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.  திருச்சி என்ஐடி பேராசிரியர் ஜெ.கார்த்திகேயன்  காட்சி விளக்கப்படம் மூலம் சாலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, தரம் குறித்து  விளக்கி பேசினார்.

இதில், ஒன்றியக்குழுத் தலைவர்கள்காமு.மு.பி.மணி (விராலிமலை), வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), பாண்டிச்செல்விபோஸ் (குன்றாண்டார்கோவில்), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), மாலா ராஜேந்திரதுரை (கறம்பக்குடி),வி.ராமசாமி (அன்னவாசல்),ஏஎல்.ராமு (திருமயம்),ஆர்.ரெத்தினவேல் (கந்தர்வக்கோட்டை), செயற்பொறியாளர் நிர்மலா ஜோஸ்மின் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர். 

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ்பிரபு வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


Top