logo
 பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு கூரியர் மூலம் குட்கா, புகையிலை வாங்கி விற்ற கும்பல் 4 பேர் கைது; 468 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு கூரியர் மூலம் குட்கா, புகையிலை வாங்கி விற்ற கும்பல் 4 பேர் கைது; 468 கிலோ குட்கா பறிமுதல்

17/Aug/2021 05:58:58

ஈரோடு, ஆக: பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு கூரியர் மூலம் குட்கா, புகையிலை வாங்கி விற்ற கும்பல் 4 பேர் கைது; 468 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பான்மசாலா போன்றவை சர்வ சாதாரணமாக  பெட்டிக் கடைகளில் கிடைத்து வந்தது. இதையடுத்து மாவட்டஎஸ்.பி  சசிமோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் கடந்த சில நாட்களாக கடைவீதிகள், மளிகை கடை குடோன்களில் அதிரடியாக சென்று சோதனை செய்து வருகின்றனர். 

இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் டவுன் டிஎஸ்பி ராஜு மேற்பார்வையில் அந்த பகுதிக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் கடந்த சில நாட்களாக கடைகள் குடோன்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொங்கலம்மன் கோவில் வீதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ராம் பிரபு ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில்  வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் கொங்கலம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜிஜெந்தரகுமார்(36) என்பதும் விற்பனை செய்வதற்கு எடுத்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜிஜெந்தர குமார், அளித்த தகவலின் பேரில் அவருக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ஈரோடு மணிக்கூண்டு சொக்கநாத வீதியைச் சேர்ந்த பிரகலாத் குமார்(22), ஈரோடு ராமசாமி லைன் இரண்டாவது வீதியைச் சேர்ந்த பாரராம் (37), அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணராம் (37) ஆகியோரையும் கைது செய்தனர்.

 இவர்கள் கருங்கல்பாளையம் கோட்டையார்  வீதியில் அவர்களுக்கு சொந்தமான குடோனில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான 468 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா போதை பாக்குகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரிடமும் போலீசார் விசாரித்ததில் அவர்கள் பெங்களூரில் இருந்து கூரியர் மூலம் ஈரோடுக்கு புகையிலை, குட்கா பொருட்களை ஆர்டர் செய்து இங்கு கொண்டு வந்து நூதன  விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த மூன்று பேரும் இதைப் போன்று நிறைய பேரிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Top