logo
 புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்புப் பணிகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம்  திட்டம்: அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எஸ்.ரகுபதி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்புப் பணிகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எஸ்.ரகுபதி ஆய்வு

10/Aug/2021 12:17:33

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியிலும், கீரனூர் அரசு மருத்துவமனையிலும் கோவிட் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் (09.08.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வுகளின்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தேசிய சுகாதார இயக்க மேலாண்மை இயக்குநர் டாக்டர்.தரேஸ் அஹமது ,ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி கிராமத்தில் பயனாளியின் இல்லத்திற்கே சென்று மக்களைத் தேடி மருத்துவம்  திட்டத்தின் கீழ் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கான சிகிச்சை மருந்துப் பொருட்களை சட்ட அமைச்சர்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  ஆகியோர் வழங்கினார்கள். 

பின்னர், திருமயத்தில் அரசு அண்ணா மருத்துவமனையில் , சிறப்பு சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, பேறுகால முன்கவனிப்பு அறை, டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவு ஆகிய பிரிவுகளில் சிகிச்சைகள் வழங்கப்படுவதை  அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், ஊனையூர் கிராமத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்த பொதுமக்களை அமைச்சர்கள் சந்தித்து கொரோனா விழிப்புணர்வு தடுப்பூசியை அனைவரும் செலுத்தப்பட்ட விவரம் குறித்தும் கேட்டறிந்து, தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டு மெனவும் அறிவுறுத்தினார்கள். 

பின்னர், ஊனையூரில் ஒரு பயனாளியின் வீட்டிற்கு நேரடியாக சென்று மக்களைத் தேடி மருத்துவம்  திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) அளிக்கப்படுவதை  அமைச்சர்கள் பார்வையிட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மருத்துவ சிகிச்சைக்கான மருந்துப் பொருட்களை பயனாளிக்கு வழங்கினார். 


பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர்அறிவுறுத்தலுக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும்  மக்களை தேடி மருத்துவம் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமில் கர்ப்பிணிகள் மற்றும் 40 வயதைக் கடந்த நபர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கீரனூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இம்மருத்துவமனைக்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு 98 சதவீதம் கோவிட் தடுப்பூசி  செலுத்தப்பட்டு, தமிழகத்திலேயே கூடுதல் சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக திகழ்கிறது.இதேபோன்று இந்தியாவிலேயே அதிகமான கர்ப்பிணிகளுக்கு கோவிட் தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். கோவிட் பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பதற்கு முதலமைச்சர்  எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 

கொரோனா நோய் அதிகம் பாதித்து மரணமடைந்தவர்களில் 60 சதவீதம் பேர் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனால் உயிரிழந்துள்ளனர். இந்த 60 சதவீதம் நபர்களை காக்கும் வகையில்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.  

எனவே பொதுமக்களை காப்பதற்கு வீடு தேடிச் சென்று மருந்துகள் வழங்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 25,617 நபர்கள் பயனடைந்துள்ளனர். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பாதித்தவர்களுக்கு ஆதரவு சிகிச்சை என்ற வகையிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு டாயாலிசிஸ் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்கெனவே ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன்  சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். மேலும் தமிழகத்தில் 1 லட்சம் எண்ணிக்கையில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இதேபோன்று குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளது. 

திருமயம் அரசு சித்த மருத்துவமனை ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டுள்ளதை  பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இந்த மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தரைதளம் அமைத்தல் போன்ற பணிகளை இந்த நிதியாண்டிலேயே மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு டயாலிசிஸ் பிரிவு அமைக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். எனவே, புதுக்கோட்டையில்  பிரத்தியேக வசதியுடன் கூடிய 10 எண்ணிக்கை டயாலிசிஸ் கருவிகள் கொண்ட மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்த ஆய்வில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் எஸ்.குருநாதன், முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன். 

வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, எம்.எஸ்.தண்டாயுதபாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராமு, பொதுசுகாதார துணை இயக்குநர்கள் அர்ஜுன்குமார், கலைவாணி மற்றும் எம்.பழனியப்பன், த.சந்திரசேகரன், க.நைனாமுகமது, எ.கே.என்.போஸ், அழகு (எ) சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


Top