logo
தொடர்ந்து 10 நாட்களாக  நீர்மட்டம் 100 அடியில் நீடிக்கும்  பவானிசாகர் அணை-1100  கன அடி நீர் வெளியேற்றம்

தொடர்ந்து 10 நாட்களாக நீர்மட்டம் 100 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை-1100 கன அடி நீர் வெளியேற்றம்

06/Aug/2021 12:01:41

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களாக  நீர்மட்டம் 100 அடியில் நீடிக்கும்  பவானிசாகர் அணை-1100  கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரித்தது. 

கடந்த மாதம் 25 -ஆம் தேதி மாலை தொடர்ந்து 4-வது ஆண்டாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த உபரி நீர்  பவானி ஆற்று வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. எனினும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக 100 அடியிலேயே இருந்து வருகிறது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.31 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 112 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி வீதம் என மொத்தம் 1,100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியிடப்பட்டு வருகிறது.

Top