logo
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்   திறப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் திறப்பு

01/Aug/2021 01:53:06

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், புதிதாக அமைக்கப்பட்ட பிராண வாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி நிலையத்தினை   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  திறந்து வைத்தனர்.

 அமைச்சர் ரகுபதி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் முதல்வர்  மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, தமிழகத்தில் கோவிட் நோய் தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.  அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளதுடன், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  பிராண வாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் ஒரு மணி நேரத்திற்கு 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று காலத்தில் ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும் நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் இருந்தால் நோயாளிகளை பாதுகாக்க மிகுந்த பயனுள்ளதாக அமையும்  முதலமைச்சர்  அறிவுறுத்தலுக்கிணங்க இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் குறுகிய காலத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா,  முன்னாள் அரசு வழக்குரைஞர்  கே.கே.செல்லப்பாண்டியன்,  அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்  பூவதி மற்றும் க. நைனாமுகமது, எம்.எம்.பாலு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


Top